செய்திகள்
ஊட்டியில் குவிந்திருந்த சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறையையொட்டி ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2021-10-15 08:28 GMT   |   Update On 2021-10-15 08:28 GMT
தொடர் விடுமுறை காரணமாக நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா நுழைவு வாயில் பகுதியில் நுழைவுச்சீட்டு வாங்குவதற்காக சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
ஊட்டி:

ஆயுத பூஜை, விஜயதசமியையொட்டி தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டு உள்ளது. மேலும் தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் விடுமுறையை கொண்டாட தமிழகம், கேரளா, புதுச்சேரி மற்றும் கர்நாடகா ஆகிய பகுதியில் இருந்து கார், வேன், மோட்டார் சைக்கிள் என ஏராளமான வாகனங்களில் பொதுமக்கள் ஊட்டிக்கு படையெடுத்தனர்.

இதனால் ஊட்டி நகரில் திரும்பிய திசை எங்கும், சுற்றுலா பயணிகளின் கூட்டமாகவே காணப்படுகிறது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 2-வது சீசனையொட்டி 10 ஆயிரம் பூந்தொட்டிகள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக மலர் மாடத்தில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. மேலும் பெரணி இல்லம் அருகில் மலர் செடிகளால் சிறிய பூங்கா போன்று அலங்காரங்கள் செய்யப்பட்டு உள்ளது. தற்போது அதில் பல்வேறு வண்ணங்களில் பூக்கள் பூத்து குலுங்குவதால், மலர் அலங்காரங்கள் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்து வருகிறது. தொடர் விடுமுறை காரணமாக நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா நுழைவு வாயில் பகுதியில் நுழைவுச்சீட்டு வாங்குவதற்காக சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

இதனால் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து நுழைவுச்சீட்டை பெற்று, பூங்காவில் உள்ள மலர் அலங்காரங்களை கண்டு ரசித்தனர். மேலும் அங்குள்ள பெரிய புல்வெளி, இத்தாலியன் கார்டன், ஜப்பான் பூங்கா, இலை பூங்கா, பெரணி இல்லம், பழமை வாய்ந்த மரங்கள் உள்ளிட்டவற்றை பார்த்தும், புகைப்படங்கள் எடுத்தும், ரசித்து மகிழ்ந்தனர். இதேபோல் ஊட்டி படகு இல்லத்திலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியதால், நீண்ட வரிசையில் காத்திருந்து சுற்றுலா பயணிகள் மிதி படகு, மோட்டார் படகு, துடுப்பு படகில் சவாரி செய்தனர். இதுதவிர ரோஜா பூங்கா, ஊட்டி-கூடலூர் சாலையில் உள்ள பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி, சூட்டிங்மட்டம், பைன் பாரஸ்ட் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் குவிந்து காணப்பட்டனர். சேரிங்கிராஸ், ஊட்டி-கோத்தகிரி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டுள்ளனர்.



Tags:    

Similar News