செய்திகள்
பள்ளி மாணவரை ஆசிரியர் சுப்பிரமணியன் அடித்து உதைக்கும் காட்சி.

வகுப்புக்கு வராததால் தாக்குதல்- மாணவனை எட்டி உதைத்த அரசு பள்ளி ஆசிரியர் கைது

Published On 2021-10-15 06:40 GMT   |   Update On 2021-10-15 06:40 GMT
மாணவர்களை ஆசிரியர் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து ஆசிரியர் சுப்பிரமணியனை சஸ்பெண்டு செய்து மாவட்ட கல்வி நிர்வாகம் உத்தரவிட்டது.
சிதம்பரம்:

கொரோனா தொற்று பரவல் குறைய தொடங்கியதையடுத்து ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நந்தனார் அரசு ஆண்கள் பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவர்கள் சிலர் வகுப்புகளுக்கு சரியாக செல்லாமல் வெளியே சுற்றுவதாக புகார் வந்தன.

இதைத்தொடர்ந்து மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் கண்காணித்தனர். அப்போது அந்த பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் அம்மாபேட்டையை சேர்ந்த சஞ்சய் (வயது 17), அஜய்குமார், நெக்டா பாலன், சுசீந்திரன், சூர்யா, சந்துரு ஆகிய மாணவர்கள் ஒருசில வகுப்புகளை புறக்கணித்து வெளியே சுற்றுவது தெரிய வந்தது. இதையடுத்து அந்த மாணவர்களை பள்ளி இயற்பியல் ஆசிரியர் சுப்பிரமணியன் (55) நேற்று முன்தினம் அழைத்து கண்டித்தார்.

இதையடுத்து அந்த மாணவர்களை ஆசிரியர் சுப்பிரமணியன் முட்டி போட வைத்தார். மாணவன் சஞ்சையை, ஆசிரியர் சுப்பிரமணியன் பிரம்பால் சரமாரியாக தாக்கியும், காலால் எட்டியும் உதைத்தார். இதனை வகுப்பில் இருந்த மாணவர்கள் செல்போன் மூலம் வீடியோ எடுத்தனர். அந்த காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலாக பரவியது. இதை பார்த்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.



இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசில் மாணவன் சஞ்சய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 294(பி), 323, 324, பொது இடத்தில் திட்டுதல், வன்மமாக பேசுதல், 18 வயதுக்கு கீழ் உள்ள மாணவனை தாக்குதல், எஸ்.சி.எஸ்.டி. பிரிவின் கீழ் ஆகிய வழக்குகள் உள்பட மொத்தம் 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து ஆசிரியர் சுப்பிரமணியனை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிதம்பரம் கிளைசிறையில் அடைத்தனர். மாணவர்களை ஆசிரியர் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து ஆசிரியர் சுப்பிரமணியனை சஸ்பெண்டு செய்து மாவட்ட கல்வி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags:    

Similar News