செய்திகள்
தப்பி ஓடிய டி 23 புலி

மயக்க ஊசி செலுத்தியும் தப்பி ஓடிய டி 23 புலி

Published On 2021-10-15 02:12 GMT   |   Update On 2021-10-15 02:12 GMT
மயக்க ஊசி செலுத்தப்பட்ட போதும் புலி தப்பி ஓடியதால் 21-வது நாளாக டி 23-புலியை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த மசினக்குடி, சிங்காரா வனப்பகுதியில் அடுத்தடுத்து 4 பேர் புலி தாக்கி இறந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்ட மாடுகளையும் புலி கொன்றது.

பொதுமக்கள் போராட்டம் காரணமாக அந்த புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஐகோர்ட்டு உத்தரவு காரணமாக புலியை மயக்க ஊசி செலுத்தி உயிரோடு பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டி-23 புலி என அடையாளம் காணப்பட்டுள்ள அந்த புலியை பிடிக்கும் பணியில் மோப்பநாய்களும், கும்கி யானைகளும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

இதற்காக வனப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மரங்களில் பரண் அமைத்து அதில் இருந்தவாறு வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், மசினகுடி வனப்பகுதியில் புலியின் நடமாட்டத்தை கண்ட வனத்துறையினர் புலிக்கு மயக்க ஊசி செலுத்தினர்.

எனினும் புலி தப்பியோடியது. மயக்க ஊசி செலுத்தப்பட்டதால் புலி சோர்வாக காணப்படும் என்பதால் புலியை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஊர்மக்கள் வனப்பகுதிக்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட வேண்டாம் எனவும் வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News