செய்திகள்
ட்ரோன்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மணல் திருட்டை தடுக்க ட்ரோன் மூலம் கண்காணிப்பு - எஸ்.பி. தகவல்

Published On 2021-10-07 15:58 IST   |   Update On 2021-10-07 15:58:00 IST
மயிலாடுதுறை மாவட்டத்தில் மணல் திருட்டு வாகனங்களை கண்டறிய சம்பந்தப்பட்ட பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளது என்று கூறியுள்ளார்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி. சுகுணா சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது,

மயிலாடுதுறை மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்வது மட்டும் அல்லாமல் சம்பந்தப்பட்ட நபர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன மற்றும் அந்த வாகனங்களின் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அவ்வாறாக தற்போது மொத்தம் 276 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையங்களில் வழக்கு சொத்தாக வைக்கப்பட்டுள்ளது.

அவற்றுள் 154 நான்கு சக்கர வாகனங்களும், 77 ஜெசிபி மற்றும் மாட்டு வண்டிகளும் அடங்கும்.அது மட்டும் அல்லாமல், இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் திருட்டில் ஈடுபட்டவர்கள் இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டு கைது நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எனவே வாகன உரிமையாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் ஒரு நபர் மீது இதுபோன்ற தொடர் மணல் திருட்டு புகார் வரும் பட்சத்தில் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும் எனவும் எச்சரிக்கப்படுகிறது. பொதுமக்கள் உங்கள் ஊர்களில் மணல் திருட்டு நடைபெறுவது பற்றிய தகவல்களை 9442626792 என்ற எண்ணிற்கு தொலைபேசி வாயிலாகவோ அல்லது வாட்ஸ் அப் மூலமாகவோ 24 மணி நேரமும் தெரிவிக்கலாம்.

உங்களின் தகவல்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வது மட்டுமல்லாமல் உடனடியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தற்போது மணல் திருட்டு வாகனங்களை கண்டறிய சம்பந்தப்பட்ட பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளது என்று கூறியுள்ளார்.

Similar News