செய்திகள்
செம்பனார்கோவில் அருகே மீன் வாங்கியதற்கான பணத்தை கேட்டதால் தகராறு- 5 பேர் கைது
செம்பனார்கோவில் அருகே மீன் வாங்கியதற்கான பணத்தை கேட்டதால் தகராறில் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொறையாறு:
செம்பனார்கோவில் அருகே முடிகண்டநல்லூர் வடபதி பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 40). இவர் சின்னமேட்டை சேர்ந்த மீனவரான மணிகண்டன் (வயது32) என்பவரிடம் மொத்தமாக மீன் வாங்கி கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்து வந்தார். மீன் வாங்கிய வகையில் மணிகண்டனுக்கு, கண்ணன் பணம் கொடுக்க வேண்டும் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக 2 பேருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில் மணிகண்டன் சின்னமேடு பகுதியை சேர்ந்தவர்களுடன் நேற்று அதிகாலை கண்ணன் வீட்டிற்கு சென்று பணம் கேட்டு உள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் அவர்கள் கண்ணணை தாக்கியதாக கூறப்படுகிறது. சத்தம் கேட்டு இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் செம்பனார்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அபோலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு கண்ணனை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக சின்னமேடு பகுதியை சேர்ந்த மணிக்கண்டன், ராஜ்குமார் (43), கலைவாணன் (36), கண்ணன் (40), புதுப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த திருமூர்த்தி (36) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக முன்னதாக பொறையாறு போலீஸ் நிலையத்தில் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் கண்ணன் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.