செய்திகள்
கொடிவேரி அணை

கொடிவேரி அணையில் நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

Published On 2021-09-20 05:12 GMT   |   Update On 2021-09-20 05:12 GMT
கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
கோபி:

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரியில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பணையில் நீர்வீழ்ச்சி போல் கொட்டும் தண்ணீரில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

சிறந்த சுற்றுலா தலமான கொடிவேரி அணையில் குளிக்க தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.

இந்த நிலையில் கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக அணை மூடப்பட்டது. இதற்கிடையே கடந்த மாதம் மீண்டும் அணை திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையே கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாகவும், பவானி ஆற்றில் அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் கடந்த மாதம் 31-ந் தேதி முதல் கொடிவேரி அணை மூடப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

தற்போது பவானி ஆற்றில் குறைந்த அளவிலேயே தண்ணீர் வருவதால் 20 நாட்களுக்கு பிறகு நாளை (21-ந்தேதி) முதல் கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து கொடிவேரி அணை பகுதியில் சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News