செய்திகள்
மீன்களில் பார்மலின் கலக்கப்படுகிறதா? உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு
நாகையில் கெட்டுப்போகாமல் இருக்க மீன்களில் பார்மலின் கலக்கப்படுகிறதா? என உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் மீன்கள் கெட்டுப்போகாமல் இருக்க பார்மலின் (நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள்) என்ற ரசாயனம் கலந்து பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் வந்தது. இதை தொடர்ந்து மாவட்ட நியமன அலுவலர் புஷ்பராஜ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், மீன்வளத்துறை ஆய்வாளர் கார்த்திகேயன், மீன்பிடிசட்ட அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜகோபால் ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேற்று நாகை பாரதிமார்க்கெட் அருகே உள்ள மீன்விற்பனை செய்யும் இடம், அக்கரைபேட்டை மீன்பிடி இறங்குதளம், புத்தூர் ரவுண்டானா உள்ளிட்ட இடங்களில் விற்பனை செய்யப்படும் மீன்களில் பார்மலின் கலக்கப்படுகிறதா? என அதிரடியாக ஆய்வு செய்தனர். இதில் மீன்களில் பார்மலின் கலக்கப்படவில்லை என்பது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என கடைகளில் ஆய்வு செய்தனர். இதில் நாகை அண்ணாசிலை அருகே ஒரு பெட்டிக்கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.
பின்னர் கடையில் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து கடை உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைசெய்தால் கடைக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.