செய்திகள்
தற்கொலை செய்து கொண்ட மாணவி சவுந்தர்யாவின் பெற்றோருக்கு அமைச்சர் துரைமுருகன் ஆறுதல் கூறிய காட்சி.

எனக்கு எதுவும் தெரியாதுங்க- கே.சி.வீரமணி வீட்டில் சோதனை குறித்து துரைமுருகன் பேச்சு

Published On 2021-09-16 08:54 GMT   |   Update On 2021-09-16 09:25 GMT
நீட் தேர்வை தடுக்க அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு செய்து வருவதாக அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
வேலூர்:

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சவுந்தர்யா என்ற மாணவி நீட் தேர்வு எழுதிவிட்டு தோல்வி பயத்தில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இன்று காலை அமைச்சர் துரைமுருகன் மாணவியின் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.

எம்.பி.க்கள் ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த், நந்தகுமார் எம்.எல்.ஏ ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-


நீட் தேர்வு எனும் கொடிய அரக்கனை மத்திய அரசு ஏவி உள்ளது. இன்னும் எத்தனை மாணவர்களின் உயிரை காவு வாங்க போகிறது என்று தெரியவில்லை.

தமிழக அரசு நீட் தேர்வினை தடுக்க வேண்டிய அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது.

தேர்வு என்பது இறுதி அல்ல. ஒரு முறை தோல்வி அடைந்தாலும் மறுமுறை தேர்ச்சி பெறலாம். மாணவர்கள் இதனை மனதில் கொண்டு தோல்வியை கண்டு துவண்டு விடக்கூடாது.

டெல்லியில் நடந்த விவசாய போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்தும் செவி சாய்க்காத மத்திய அரசா மாணவர்களின் இழப்பிற்கு செவிசாய்க்க போகின்றது.

நீட் தேர்வின் காரணமாக உயிர் இழந்த மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் பெரும் கோபமும் கண்ணீரும் வீண்போகாது இதற்கு கண்டிப்பாக தீர்வு காணப்படும்.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்துவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News