செய்திகள்
கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் திருநங்கை சவுமியா பதிவை காண்பித்து வாழ்த்து பெற்றபோது எடுத்தபடம்.

நீலகிரியில் முதல் முறையாக வக்கீலான திருநங்கை

Published On 2021-09-16 07:51 GMT   |   Update On 2021-09-16 07:51 GMT
நீலகிரியில் முதல் முறையாக வக்கீலான திருநங்கை, மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் பணியாற்றுவேன் என கூறினார்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் குருசடி காலனி பகுதியை சேர்ந்தவர் திருநங்கை சவுமியா சாசு.

இவர் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை திருச்சியில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பு படித்து முடித்துள்ளார்.

படிப்பை முடித்துள்ள சவுமியா சாசு தமிழ்நாடு பார் கவுன்சிலில் பதிவு செய்து வக்கீலாக பயிற்சி பெற உள்ளார்.

இந்த நிலையில் தான் வக்கீலாக பார்கவுன்சிலில் பதிவு செய்ததை நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு கலெக்டர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். அப்போது சமூக நல அலுவலர்(பொறுப்பு) தேவகுமாரி உடன் இருந்தார்.

கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெற்ற திருநங்கை சவுமியாசாசு கூறியதாவது:-

தமிழகத்தில் தூத்துக்குடியை சேர்ந்த திருநங்கை ஒருவர் கர்நாடகாவில் சட்டப்படிப்பு முடித்து தமிழகத்தில் பதிவு செய்தார்.

ஆனால் நான் முதல் முறையாக தமிழகத்திலேயே சட்டப்படிப்பு படித்து பார் கவுன்சிலில் பதிவு செய்துள்ளேன். நான் வக்கீலாக எனது சொந்த ஊரிலேயே பணியாற்ற உள்ளது பெருமையாக உள்ளது. மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் பணியாற்றுவேன்.

இதன் மூலம் திருநங்கைகளை வழிநடத்துவதோடு, 5 ஆண்டுகள் பயிற்சி பெற்று அனைத்து மக்களுக்கும் சமூக சேவை புரிவேன். நீதிபதி ஆவதே எனது லட்சியம். மேலும் வருகிற 24-ந் தேதி நடைபெறும் அகில இந்திய பார் கவுன்சில் தேர்வில் கலந்து கொள்ள உள்ளேன். இதில் தேர்ச்சி பெற்றால் நிரந்தர உறுப்பினராக வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நீலகிரியில் முதல் முறையாக திருநங்கை ஒருவர் வக்கீல் ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News