செய்திகள்
கோப்புபடம்

அரசு ஊழியர்களுக்கு 2 மாதத்தில் பதவி உயர்வு - ரங்கசாமி

Published On 2021-09-11 18:28 GMT   |   Update On 2021-09-11 18:28 GMT
புதுச்சேரி அரசில் நீண்ட ஆண்டுகளாக பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு 2 மாதத்தில் பதவி உயர்வு வழங்கப்படும் முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுச்சேரி காவல் துறை ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர்கள் 431 பேருக்கு ஏட்டு (ஸ்பெஷல் கிரேடு) பதவி உயர்வு வழங்கும் விழா கோரிமேடு காவலர் மைதானத்தில் நடந்தது. விழாவில் போலீஸ் டி.ஜி.பி. ரன்வீர் சிங் கிறிஷ்ணியா வரவேற்றார். விழாவுக்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். ஏ.கே.டி. ஆறுமுகம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர்களுக்கு ஸ்பெஷல் கிரேடு பேட்ஜ் அணிவித்தார்.

விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

புதுவை காவல்துறை பொதுமக்களுக்கு சிறப்பான பாதுகாப்பை அளித்து வருகிறது. மாநிலத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப காவல்துறையில் கூடுதலாக போலீசார் நியமிக்கப்படுவார்கள். காவல்துறையை பலப்படுத்த அரசு அதிக நிதி ஒதுக்கி உள்ளது. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுக்கப்படும். அரசு துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்ப அரசு முழுமுயற்சி மேற்கொண்டு வருகிறது.

கொரோனா பரவலின்போது போலீசார் சிறந்த முறையில் பணியாற்றினார்கள். அனைவருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துகொள்கிறேன். புதுவை அரசு மக்களுக்கு தேவையான திட்டங்களை படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. அதன்படி புதுவை அரசின் பல்வேறு துறைகளில் பல ஆண்டுகளாக  பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு பதவி உயர்வு, பணி நிரந்தரம் 2 மாதங்களில் வழங்கப்படும்.

புதுச்சேரி மிகச்சிறிய மாநிலம். கொரோனா பரவலை தடுக்க அரசும், சுகாதாரத்துறையும் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. அரசின் அனைத்து முயற்சிக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி அனைவரும் போட வேண்டும். புதுவை மாநிலத்தில் உள்ள அனைவரும் 100 சதவீதம் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் என்பதை உறுதி செய்ய வேண்டும். இதுகுறித்து பொதுமக்களிடம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் போலீஸ் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரதிக்‌ஷா கோத்ரா நன்றி கூறினார்.

Tags:    

Similar News