செய்திகள்
மீனவர்கள் மோதல்

புதுச்சேரியில் மீனவர்கள் நாளை முதல் கடலுக்கு செல்லலாம்

Published On 2021-09-04 13:43 GMT   |   Update On 2021-09-04 13:43 GMT
மோதலில் ஈடுபட்ட 3 கிராம நிர்வாகிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக அமைச்சர் லட்சுமி நாராயணன் கூறினார்.
புதுச்சேரி:

புதுச்சேரியில் சுருக்குமடி வலை விவகாரம் தொடர்பாக மீனவ கிராமங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. நல்லவாடு, வீராம்பட்டினம் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் நடுக்கடலில் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நிலைமை மோசமடைந்ததையடுத்து, போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி மீனவர்களை கலைத்தனர்.

வீராம்பட்டினம், நல்லவாடு மீனவர்களுக்கு இடையே மீண்டும் மோதல் வெடிக்கலாம் என்பதால் நல்லவாடு, புதுக்குப்பம், சின்ன வீராம்பட்டினம், வீராம்பட்டினம் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நல்லவாடு, வம்பாகீரப்பாளையம், வீராம்பட்டினம் கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

இந்த தடை உத்தரவு இன்றுடன் முடிவடைகிறது. தடை உத்தரவு மேற்கொண்டு நீட்டிக்கப்படவில்லை. நாளை முதல் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லலாம் என அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்தார். மோதலில் ஈடுபட்ட 3 கிராம நிர்வாகிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.
Tags:    

Similar News