செய்திகள்
செய்யாறு அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் பலி
செய்யாறு அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்யாறு:
செய்யாறு தாலுகா திருவேங்கடநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 30). இவருக்கு திருமணமாகி மனைவி சசிரேகா, மகள் சண்முகப்பிரியா உள்ளனர். ராம்குமார் செய்யாறு டவுன் பகுதியில் ஆற்காடு சாலையில் பேப்பர் மற்றும் எழுதுப்பொருள் விற்பனை கடை நடத்தி வந்தார்.
நேற்று கடைக்கு வந்து மீண்டும் வீட்டுக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். செய்யாறு- காஞ்சீபுரம் சாலையில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகில் சென்றபோது, அந்த வழியாக காஞ்சீபுரத்தில் இருந்து செய்யாறு நோக்கி வந்த ஒரு தனியார் பஸ் திடீரென எதிரே வந்த ராம்குமாரின் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. அதில் பலத்த காயம் அடைந்த ராம்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
செய்யாறு போலீசார் விரைந்து வந்து அவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் இருந்து தப்பியோடிய பஸ் டிரைவர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சோலை செய்யாறு போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.