செய்திகள்
குளம்போல் தேங்கியுள்ள தண்ணீரில் சிக்கிய மோட்டார் சைக்கிள்கள்.

புதுச்சேரியில் இடி, மின்னலுடன் பலத்த மழை

Published On 2021-09-03 02:35 GMT   |   Update On 2021-09-03 02:35 GMT
மழை காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்தடை செய்யப்பட்டது.
புதுச்சேரி:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுவையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

அதன்படி புதுச்சேரியில் நேற்று காலையில் இருந்தே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 5 மணிக்கு மேல் வானில் கருமேகங்கள் திரண்டன.

கடற்கரை சாலையில் வானில் திரண்டு வந்த கருமேக கூட்டம் கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இதனை அங்கிருந்த மக்கள் தங்களது செல்போன்களில் படம் பிடித்தனர்.

சிறிது நேரத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை இரவு 9 மணி வரை நீடித்தது. இதன் காரணமாக புதுவையின் பிரதான சாலைகளான இந்திராகாந்தி சிக்னல், அண்ணா சாலை, புஸ்சி வீதி, கடற்கரை சாலை, கோரிமேடு உள்ளிட்ட இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

பின்னர் இரவு முழுவதும் மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. மழை காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்தடை செய்யப்பட்டது.

புதுவை மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது.
Tags:    

Similar News