செய்திகள்
பெரம்பலூரில் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமையில் கட்சியினர் மறியலில் ஈடுபட்ட காட்சி.

அரியலூர்- பெரம்பலூர் மாவட்டங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் கைது

Published On 2021-09-01 10:43 GMT   |   Update On 2021-09-01 10:43 GMT
அரியலூர்- பெரம்பலூர் மாவட்டங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர்:

அண்ணா பல்கலைக்கழகத்துடன் விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகம் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசை கண்டித்தும், அதற்கான சட்ட மசோதாவை எதிர்த்து சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் அ.தி.மு.க.வினர் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் அரியலூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை முன்பு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொருளாளர் அன்பழகன், மாணவரணி செயலாளர் சங்கர், நகர செயலாளர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து அரியலூர் பஸ் நிலையம் முன்பு மாவட்ட செயலாளர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, காழ்ப்புணர்ச்சியுடன் பெயர் நீக்கப்பட்டுள்ளதாகவும், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பெயரில் மீண்டும் பல்கலைக்கழகத்தை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 25 பெண்கள் உள்பட 100 பேரை போலீசார் கைது செய்து வாகனத்தில் அழைத்து சென்றனர்.

இதேபோல் தா.பழூர் சுத்தமல்லி பிரிவு சாலை அருகே கும்பகோணம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சாலையின் குறுக்கே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதில் தா.பழூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அசோகன், கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் ராமச்சந்திரன் உள்பட கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 29 பேர், போலீசாரால் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

ஜெயங்கொண்டம் 4 ரோட்டில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர்கள் கல்யாணசுந்தரம், தங்கபிச்சமுத்து, மாவட்ட ஜெயலலிதா பேரவை பொறுப்பாளர்கள் ஜெகன்ராஜ், மனோகரன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினரை போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த சாலை மறியலால் ஜெயங்கொண்டம் 4 ரோடு பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருமானூரில் எம்.ஜி.ஆர். சிலை அருகே தஞ்சையில் இருந்து அரியலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றிய செயலாளர்கள் குமரவேல், வடிவழகன் தலைமையில் அ.தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 45 பேரை திருமானூர் போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் காந்தி சிலை அருகே மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற நகர நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், அண்ணா தொழிற்சங்கம், தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் உள்பட 55 பேரை போலீசார் கைது செய்தனர்.

குன்னத்தில் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் குன்னம் குணசீலன் தலைமையில் குன்னம் பஸ் நிலையம் அருகே உள்ள அரியலூர்- பெரம்பலூர் சாலையில் அமர்த்து அ.தி.மு.க.வினர் மறியல் போராட்டம் நடத்தினர். இதில் வர்த்தக அணி மாவட்ட செயலாளர் அந்தூர் ராஜேந்திரன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட சுமார் 50 பேரை குன்னம் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆலத்தூர் தாலுகா நக்கசேலம் கிராமத்தில் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சசிகுமார் தலைமையில் துறையூர்-பெரம்பலூர் சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அ.தி.மு.க.வினரை பாடாலூர் போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து பின்னர் விடுவித்தனர்.
Tags:    

Similar News