செய்திகள்
கனமழையால் உப்பு பாத்திகளில் தண்ணீர் தேங்கி உள்ளதை படத்தில் காணலாம்.

வேதாரண்யத்தில் கனமழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு

Published On 2021-08-15 10:23 IST   |   Update On 2021-08-15 10:23:00 IST
தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும் வேதாரண்யத்தில் ஆண்டு ஒன்றுக்கு 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும் வேதாரண்யத்தில் ஆண்டு ஒன்றுக்கு 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மற்றும் கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் நாள்தோறும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வந்தது. நேற்று நள்ளிரவிலும் கனமழை பெய்தது. தொடர் மழையால் வேதாரண்யம், அகஸ்தியன்பள்ளி உள்ளிட்ட இடங்களில் உப்பு பாத்திகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உற்பத்தியாளர்கள் சேமித்து வைத்துள்ள உப்பு குவியல்களை மழையில் இருந்து பாதுகாக்க தார்பாய் மற்றும் பனைஓலைகளை கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ளது.

உப்பு பாத்திகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் தண்ணீர் வடிய ஒரு வார காலம் ஆகும் எனவும் அதன் பிறகு உற்பத்தி மீண்டும் தொடங்கும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

Similar News