செய்திகள்
குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலையை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பார்வையிட்ட போது எடுத்த படம்.

மக்கும் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை - அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார்

Published On 2021-08-11 17:28 IST   |   Update On 2021-08-11 17:28:00 IST
சிவகங்கை அருகே ஊராட்சியின் மூலமாக மக்கும் குப்பைகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் ஆலையை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் திறந்துவைத்தார்.
சிவகங்கை:

சிவகங்கையை அடுத்த காஞ்சிரங்காலில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் ரூர்பன் திட்டத்தில் ரூ.65 லட்சம் மதிப்பில் மக்கும் குப்பைகளை பயன்படுத்தி பயோகியாஸ் தயாரித்து அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.இதன் தொடக்க விழா கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது.காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து வரவேற்றுப் பேசினார்.

விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஆலையை திறந்து வைத்து பேசியதாவது:-

ரூர்பன் திட்டத்தில் சிவகங்கை நகரை ஒட்டியுள்ள 7 ஊராட்சிகளில் நகரங்களுக்கு நிகரான உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்பட உள்ளது.தற்பொழுது தினசரி சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை பயன்படுத்தி பயோகியாஸ் உற்பத்தி செய்து அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

இங்கு ஒரு நாளைக்கு 2 டன் வரை குப்பைகளில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்து ஊராட்சியில் தெருவிளக்குகளுக்கு மின் சப்ளை வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் ஒருநாளைக்கு 200 யூனிட் வரை மின்சாரம் தயாரிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மானாமதுரை தொகுதி தமிழரசி எம்.எல்.ஏ., ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வீரபத்திரன், சிவகங்கை ஊராட்சி ஒன்றிய தலைவர் மஞ்சுளா பாலச்சந்தர், வட்டார வளர்ச்சி அலுவலர் உமா மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் ரெத்தினவேலு நன்றி கூறினார்.

Similar News