செய்திகள்
தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றம் நடந்த காட்சி.

தூத்துக்குடியில் பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2021-07-26 10:08 IST   |   Update On 2021-07-26 12:58:00 IST
கொரோனா விதிகளை பின்பற்றி திருவிழா நடைபெற வேண்டும் என்பதால் பொதுமக்கள் தனித்தனியாக சென்று வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
தூத்துக்குடி :

உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதி வரை நடக்கும்.

ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்ளும் நிலையில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது. இந்த ஆண்டும் கொரோனா 2-வது அலை காரணமாக பொதுமக்கள் பங்கேற்பின்றி திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இன்று காலை 4 மணிக்கு ஜெபமாலை நடந்தது. தொடர்ந்து 4.30 மணிக்கு திருப்பலியும், 7 மணிக்கு கொடியேற்றமும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமை தாங்கினார். பின்னர் கொடி பிரதிஷ்டை செய்யப்பட்டு கொடிமரத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பிரார்த்தனைக்கு பிறகு ஆயர் கொடியேற்றி வைத்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் அனைத்து நிகழ்ச்சிகளும் உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. காலை 9 மணிக்கு 3-ம் திருப்பலி நடைபெற்றது.

பகல் 12 மணிக்கு பனிமயமாதாவுக்கு பொன் மகுடத்தை அணிவிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து மதியம் 3 மணி மற்றும் இரவு 7 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

விழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. ஆகஸ்ட் மாதம்ட 4-ந்தேதி இரவு பெருவிழா மாலை ஆராதனை நடக்கிறது. மறுநாள் மாலை 5 மணிக்கு பாளை மறை மாவட்ட பி‌ஷப் அந்தோணி சாமி தலைமையில் 8-ம் திருப்பலி நடக்கிறது.

கொரோனா விதிகளை பின்பற்றி திருவிழா நடைபெற வேண்டும் என்பதால் பொதுமக்கள் தனித்தனியாக சென்று வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. கொடி பவனி, நற்கருணை பவனி, சப்பர பவனி ரத்து செய்யப்பட்டு உள்ளது. விழா நாட்களில் வழக்கமாக பேராலயத்தின் அனுமதியோடு நடத்தப்படும் கடைகளும், பொருட்காட்சி நடத்தவும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை பேராலய திருத்தல பணியாளர்கள், பங்குதந்தை குமார் ராஜா, உதவி பங்கு தந்தை மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் சுமார் 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Similar News