செய்திகள்
பிரதமர், உள்துறை மந்திரியை அவதூறாக பேசிய பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
பிரதமர் மற்றும் உள்துறை மந்திரியை அவதூறாக பேசிய பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு இந்து மதத்தையும், பிரதமர் மற்றும் உள்துறை மந்திரி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களை அவதூறாக பேசிய கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாநில வக்கீல் அணி பிரிவு தலைவர் வக்கீல் ராஜேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவி.சேதுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் மோடி கண்ணன் வரவேற்று பேசினார். இதில் வாயு சித்த ராமானுஜ ஜீயர் கலந்து கொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் நாட்டில் பதட்டத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்து மதத்தையும், பிரதமர் நரேந்திரமோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் அவதூறாக பேசிய கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்தும், அவர் மீது கடுமையான சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் விசுவ இந்து பரிஷத் மாநில துணைத் தலைவர் வாஞ்சிநாதன், பா.ஜ.க. தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில செயலாளர் நாஞ்சில்பாலு, பட்டியலணி மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராம.சிவசங்கர், மாவட்ட மகளிரணி செயலாளர் சித்ரா, பட்டியலணி மாவட்ட செயலாளர் ஈழவேந்தன், மாநில பொதுக்குழு உறுப்பினர் எழிலரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில், ஒன்றிய தலைவர் சுந்தரவடிவேல் நன்றி கூறினார்.