செய்திகள்
கூடலூர் அருகே குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை- பொதுமக்கள் பீதி

கூடலூர் அருகே குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை- பொதுமக்கள் பீதி

Published On 2021-07-14 08:44 GMT   |   Update On 2021-07-14 08:44 GMT
பாடந்தொரை பகுதியில் தற்போது பகல் நேரத்திலும் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வருகின்றன.
கூடலூர்:

கூடலூர் அருகே தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பாடந்தொரை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இங்கு குடியிருப்பு பகுதிக்குள் அடிக்கடி காட்டு யானைகள் புகுந்து வருவதால், பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

இதற்கிடையில், ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் சேவை சரிவர கிடைக்காததால், வீட்டைவிட்டு வெளியே வரும் மாணவ-மாணவிகள் காட்டு யானைகளிடம் சிக்கும் அபாய நிலை உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மூச்சிகண்டி கிராமத்தில் பகல் நேரத்தில் காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இதனைக்கண்ட பொதுமக்கள் வீட்டுக்குள் பதுங்கிக்கொண்டனர். தொடர்ந்து காட்டு யானை குடியிருப்பு பகுதிகளை சுற்றி வந்தது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர். பின்னர் கிராம மக்கள் கூச்சலிட்டவாறு இருந்தனர். இதையடுத்து காட்டு யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

பாடந்தொரை பகுதியில் தற்போது பகல் நேரத்திலும் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வருகின்றன. தற்போது கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், மாணவ-மாணவிகள் ஆன்லைன் மூலம் கல்வி கற்று வருகின்றனர்.

சில நேரங்களில் சேவை கிடைக்காமல் திறந்தவெளியில் சுற்றி வருகின்றனர். இதனால் மனித-வனவிலங்குகள் மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுவதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Tags:    

Similar News