செய்திகள்
குழந்தை பெற்ற இளம்பெண்ணை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் உறவினர்கள்.

வீட்டில் குழந்தை பெற்ற இளம்பெண்ணை சிகிச்சைக்காக தொட்டில் கட்டி சுமந்து சென்ற உறவினர்கள்

Published On 2021-07-13 09:40 IST   |   Update On 2021-07-13 09:40:00 IST
கோத்தகிரி அருகே வீட்டில் குழந்தை பெற்ற இளம்பெண்ணை சிகிச்சைக்காக தொட்டில் கட்டி உறவினர்கள் சுமந்து சென்றனர்.
கோத்தகிரி:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ளது, தாளமொக்கை ஆதிவாசி கிராமம். இங்கு வசிக்கும் 19 வயது இளம்பெண் கர்ப்பிணியாக இருந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. கர்ப்பிணியாகி 7 மாதம் மட்டுமே ஆகியிருந்த நிலையில், அவருக்கு குறை பிரசவமாக குழந்தை பிறந்தது. ஆனால் தொப்புள் கொடி முழுமையாக வெளியே வரவில்லை. இதனால் அவருக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த சோலூர்மட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சந்திரிகா தலைமையிலான குழுவினர் நேரில் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேலும் அவரை ஊட்டி அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டி இருந்தது.

ஆனால் தாளமொக்கை ஆதிவாசி கிராமத்துக்கு செல்ல சரிவர சாலை வசதி இல்லை. இதனால் ஆம்புலன்ஸ் வர முடியாத நிலை ஏற்பட்டது. உடனே குழந்தையுடன் அவரை உறவினர்கள் தொட்டில் கட்டி சுமார் 1½ கிலோ மீட்டர் தூரத்தை கடந்து தாளமொக்கை இலைசெட் பகுதிக்கு சுமந்து சென்றனர். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கும், குழந்தைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் தாளமொக்கை கிராமத்தில் சாலை வசதியை மேம்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Similar News