செய்திகள்
வாகனங்களை வழிமறித்தபடி ஒற்றை யானை நின்றதை படத்தில் காணலாம்.

ஆசனூர் அருகே நடுரோட்டில் நின்றபடி வாகனங்களை வழிமறித்த யானை

Published On 2021-07-11 19:36 IST   |   Update On 2021-07-11 19:36:00 IST
ஆசனூர் அருகே நடுரோட்டில் நின்றபடி வாகனங்களை ஒற்றை யானை வழிமறித்தது.
தாளவாடி:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் சத்தியமங்கலம், ஆசனூர், கேர்மாளம், ஜீர்கள்ளி உள்பட மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் ஏராளமான யானை, காட்டெருமை, புலி, சிறுத்தை உள்பட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.

இந்த வனப்பகுதி வழியாக திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதனால் வாகன போக்குவரத்து எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். மேலும் வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து தண்ணீர் மற்றும் உணவை தேடி அடிக்கடி சாலையை கடக்கின்றன.

தற்போது ஆசனூர் வனப்பகுதிகளில் வாகன போக்குவரத்து குறைவாக இருப்பதால் வனவிலங்குகள் சாலையில் உலா வருகின்றன. இந்த நிலையில் நேற்று ஆசனூரை அடுத்த தமிழக-கர்நாடக மாநில எல்லையான காரப்பள்ளம் என்ற இடத்தில் ஒற்றை யானை ஒன்று வந்தது.

வெகுநேரம் நடுரோட்டிலேயே யானை நின்று கொண்டது. இதனால் எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. யானையை பார்த்த வாகன ஓட்டிகள் சற்று தூரத்தில் தங்கள் வாகனங்களை நிறுத்திக்கொண்டனர்.

சிறிது நேரம் கழித்து யானை தானாகவே காட்டுக்குள் சென்றுவிட்டது. அதன்பின்னரே போக்குவரத்து நிலமை சீராகியது. வாகனங்கள் அங்கிருந்து சென்றன.

வனவிலங்குகள் அடிக்கடி சாலையை கடப்பதால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Similar News