செய்திகள்
டாக்டர் உதவியின்றி கருக்கலைப்பு செய்த இளம்பெண் மரணம்- ஆண்டிமடம் போலீசார் விசாரணை
டாக்டர் உதவியின்றி கருக்கலைப்பு செய்த இளம்பெண் உயிரிழந்தது குறித்து ஆண்டிமடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த ஆண்டிமடம் அருகே உள்ள ராங்கியம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. விருத்தாச்சலம் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் மருத்துவமனைக்கு பரிசோதனை செய்ய வந்த பெண்ணாடம், கொத்தட்டை கிராமத்தைச் சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர் பழக்கமாகி உள்ளார்.
இதில் சுப்புலட்சுமி திருமணமாகாத நிலையில் கர்ப்பமாக இருந்ததால் அதை கலைப்பதற்கு கிருஷ்ணவேணி மூலம் ஆண்டிமடம் அருகே உள்ள அன்னகாரகுப்பம் பகுதியில் உள்ள பொற்செல்வி என்பவர் வீட்டில் வைத்து கருகலைப்பு செய்வதாக கூறியுள்ளார்.
இதற்கு உதவியாக சுப்புலட்சுமி தனது நண்பர் ஒருவருடன் ஆண்டிமடம், அன்னங்காரகுப்பம் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது தகுந்த மருத்துவர் பரிந்துரை இன்றி அவருக்கு கருக்கலைப்பு செய்துள்ளனர்.
இந்த நிலையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. இதனையடுத்து ஆண்டிமடம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு உள்ள பரிசோதனை செய்ததில் ஆபத்து கட்டத்தில் இருப்பதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அங்கு சரியான முறையில் முகவரி தெரிவிக்காமல் இருந்துள்ளனர். அதிக உதிரப்போக்கு காரணமாக உடனிருந்தவர் அந்த பெண்ணை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதற்கிடையே சுப்புலட்சுமியை பரிசோதனை செய்த டாக்டர் அவர் இறந்துவிட்டதாக கூறினர். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் ஆம்புலன்ஸ் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.