புதுவை கிராமப்பகுதியில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100 தாண்டியது- பொதுமக்கள் கடும் அதிர்ச்சி
பாகூர்:
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100-ஐ தாண்டி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் புதுவையிலும் பெட்ரோல் லிட்டருக்கு 100-ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
முன்பெல்லாம் தமிழகத்தில் பெட்ரோல் விலை உயர்ந்தால் புதுவையில் பெட்ரோல் விலை குறைவாக தான் இருக்கும். இதனால் தமிழகத்தில் இருந்து ஆட்டோ டாக்சி, பஸ் போன்ற வாகனங்கள் புதுவையை நோக்கி படையெடுக்கும்.
ஆனால் தற்போது தமிழகத்துக்கு நிகராக புதுவையிலும் பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று கிராமப்புறங்களான பாகூர், கிருமாம்பாக்கம், தவளக்குப்பம், அரியாங் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100 தாண்டி ரூ.100.20-க்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் கிராமப்புறங்களில் உள்ள வாகன ஓட்டிகள் குறிப்பாக தினக்கூலி தொழிலாளர்கள், இருசக்கர வாகனத்தில் காய்கறி விற்பனை செய்பவர்கள் கிராமப்புறங்களில் இருந்து நகரப் பகுதிக்கு வேலைக்கு செல்பவர்கள் உள்ளிட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து இதே நிலைமையில் பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டு போனால் இரு சக்கர வாகனத்தில் இருந்து சைக்கிளுக்கு மாற வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும் என வாகன ஓட்டிகள் வேதனையுடன் கூறி வருகின்றனர்.