செய்திகள்
செமஸ்டர் தேர்வு இன்று தொடக்கம் - விடைத்தாள் வாங்குவதற்காக கல்லூரியில் திரண்ட மாணவர்கள்
செமஸ்டர் தேர்வு இன்று தொடங்குவதையொட்டி கடலூர் பெரியார் கல்லூரியில் விடைத்தாள் வாங்குவதற்காக மாணவர்கள் திரண்டனர்.
கடலூர்:
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றது. இருப்பினும் 2 மற்றும் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நடந்து முடிந்த நிலையில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் 2-வது செமஸ்டர் தேர்வு நடத்தப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 2-வது செமஸ்டர் தேர்வை ஜூலை 1-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடத்த பல்கலைக்கழகம் முடிவு செய்தது. அதன்படி கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் சுமார் 1,500 மாணவ-மாணவிகள் 2-வது செமஸ்டர் தேர்வுக்கான விடைத்தாள்களை வாங்கிச் செல்வதற்காக நேற்று காலை கல்லூரிக்கு திரண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் கல்லூரி அலுவலகத்திற்கு சென்று தங்கள் துறைகளை சேர்ந்த பேராசிரியர்களிடம் தேர்வுக்கான விடைத்தாள்களை வாங்கிச்சென்றனர். கொரோனா வைரஸ் 2-வது அலை பரவலுக்கு மத்தியில் ஒரே நேரத்தில் கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் திரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து பேராசிரியர் ஒருவர் கூறுகையில், கடலூர் பெரியார் அரசு கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை வகுப்புகளில் மொத்தம் 5500 மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். இதில் இளங்கலை முதலாம் ஆண்டில் மட்டும் 1500 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இதில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் செமஸ்டர் தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. அதனால் அவர்களுக்கு மட்டும் நாளை (அதாவது இன்று) முதல் 9-ந் தேதி வரை தேர்வு நடத்தப்படுகிறது. அதற்காக இன்று (அதாவது நேற்று) மாணவர்களுக்கு விடைத்தாள்கள் வழங்கப்பட்டுள்ளது.அதனை பெற்றுக்கொண்ட மாணவர்கள் தேர்வு நடைபெறும் போது, ஆன்லைனில் வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து அனைத்து தேர்வுகளையும் எழுத வேண்டும். பின்னர் 9-ந் தேதியுடன் அனைத்து தேர்வுகளும் முடிந்ததும், மாணவர்கள் அனைவரும் விடைத்தாள்களை கல்லூரிக்கு வந்து அந்தந்த துறை அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார்.