செய்திகள்
முதல்-அமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரி அமைச்சர்கள் இன்று பதவி ஏற்பு

Published On 2021-06-26 19:12 GMT   |   Update On 2021-06-26 19:12 GMT
என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 3, பா.ஜ.க.வுக்கு 2 அமைச்சர்கள் என புதுச்சேரியில் அமைச்சரவை இன்று பதவி ஏற்கிறது. இதற்கான விழா கவர்னர் மாளிகை முன் எளிய முறையில் நடக்கிறது.
புதுச்சேரி:

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. கடந்த மாதம் 7-ந்தேதி என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். அப்போது அவருடன் வேறு யாரும் அமைச்சர்களாக பொறுப்பேற்கவில்லை.

இந்தநிலையில் அமைச்சர் பதவிகளை பகிர்ந்து கொள்வது தொடர்பாக என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. ஆகிய கட்சிகளிடையே ஒரு மாதத்துக்கும் மேலாக இழுபறி நீடித்து வந்த நிலையில், 23-ந் தேதி புதிய அமைச்சர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனிடம் முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

இந்த பட்டியலில் என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, பா.ஜனதாவின் நமச்சிவாயம், சாய்.சரவணன் குமார் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்று இருந்தன.

இந்தநிலையில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு தொடர்பான அறிவிப்பும் அதிகாரபூர்மாக வெளியிடப்பட்டது. அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொள்கின்றனர்.

இதற்கான விழா கவர்னர் மாளிகை முன் எளிமையாக நடக்கிறது.

பதவி ஏற்பு விழா மேடைக்கு இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வருகிறார். புதிய அமைச்சர்கள் நியமனத்துக்கான மத்திய அரசின் உத்தரவை தலைமை செயலாளர் அஸ்வனி குமார் வாசி்க்கிறார். அதைத்தொடர்ந்து அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொள்கிறார்கள்.

புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, சாய்.சரவணன் குமார் ஆகியோருக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

புதிய அமைச்சர்களுக்கு கவர்னர் மற்றும் முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவிக்கிறார்கள்.
Tags:    

Similar News