செய்திகள்
கடலூர் மாவட்டத்தில் பெண்கள் உள்பட 4 பேர் கொரோனாவுக்கு பலி
மாவட்டத்தில் கொரோனா வைரசுக்கு 2 பெண்கள் உள்பட 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் புதிதாக 138 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 57,232 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 54,915 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 742 பேர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில் நேற்று வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 138 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளது தெரியவந்துள்ளது. இவர்களில் சென்னையில் இருந்து மங்களூர் வந்த ஒருவருக்கும், அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த 4 பேருக்கும், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 26 பேருக்கும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 107 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 57 ஆயிரத்து 371 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த 60 வயது பெண் அரியலூர் அரசு மருத்துவமனையிலும், மருங்கூரை சேர்ந்த 55 வயது பெண், காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த 80 வயது முதியவர், பண்ருட்டியை சேர்ந்த 66 வயது நபர் ஆகியோர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் நேற்று அவர்கள் 4 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 746 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 209 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் இதுவரை 55 ஆயிரத்து 124 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.