செய்திகள்
கோப்பு படம்

வில்லியனூர் அருகே மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற தகராறில் கூலி தொழிலாளிக்கு கத்தி குத்து

Published On 2021-06-26 15:17 IST   |   Update On 2021-06-26 15:17:00 IST
வில்லியனூர் அருகே மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற தகராறில் கூலி தொழிலாளிக்கு கத்தி குத்து விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி:

வில்லியனூர் அருகே செம்பியப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவா (வயது50). கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு இவர் மோட்டார் சைக்கிளில் சாராயக்கடைக்கு சென்று விட்டு பின்னர் வீடு திரும்பினார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த பவித்ரன் என்பவர் அதிக குடிபோதையில் சிவாவை பார்த்து எங்கள் தெருவிலேயே மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி செல்கிறாயா? என தகராறு செய்தார். அதற்கு சிவா நீ யார் கேட்பது என கூறி விட்டு அங்கிருந்து சென்றார்.

இதனால் ஆத்திரமடைந்த பவித்ரன் வீட்டுக்கு சென்று கத்தியை எடுத்து வந்து சிவாவின் தலையில் வெட்டினார். இதனை சிவாவின் மகன்கள் பிரகாஷ் மற்றும் மணிகண்டன் ஆகியோர் தடுக்க முயன்றார்.

அப்போது பவித்ரனுக்கு ஆதரவாக அவரது சகோதரர்கள் பார்த்தீபன் மற்றும் சிவசங்கர் ஆகியோர் தடி மற்றும் இரும்பு கம்பியை எடுத்து வந்து சிவா மற்றும் அவரது மகன்கள் பிரகாஷ், மணிகண்டன் ஆகியோரை தாக்கினர். மேலும் பாட்டிலாலும் குத்தினர். அதோடு கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த சிவா கரிக்கலாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து சிவாவின் மகன் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் புறக்காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News