செய்திகள்
கால்நடை தீவனப்பண்ணை அமைய உள்ள இடத்தை கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.

மானாமதுரை அருகே 20 ஏக்கரில் கால்நடை தீவன பண்ணை அமைக்கப்படும் - கலெக்டர் தகவல்

Published On 2021-06-06 20:50 IST   |   Update On 2021-06-06 20:50:00 IST
மானாமதுரை அருகே தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 20 ஏக்கரில் கால்நடை தீவன பண்ணை அமைக்கப்படும் என்று கலெக்டர் மதுசூதன் ரெட்டி கூறினார்.
மானாமதுரை:

மானாமதுரை அருகே உள்ள சன்னதி புதுக்குளம் ஊராட்சி, கே.கே.பள்ளம் கிராமத்தில் கால்நடைப் பராமரிப்புத்துறையின் மூலம் மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில் கால்நடை தீவனப்பண்ணை அமைப்பது தொடர்பாக நேரில் சென்று கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் மதுசூதன் ரெட்டி கூறியதாவது:-

கால்நடைப் பராமரிப்புத்துறை மூலம் கால்நடை வளர்ப்பவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கால்நடை தீவனபண்ணை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.மானாமதுரை வட்டத்தில் கால்நடை வளர்ப்புகள் நிறைந்த இப்பகுதியில் கால்நடை வளர்ப்பவர்கள் பயன்பெறும் கால்நடை தீவனப்பண்ணை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கே.கே.பள்ளம் கிராமத்தில் 60 ஏக்கர் பரப்பளவில் தீவன பண்ணை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக மாநில தீவன அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ரூ.3.44 லட்சம் மதிப்பீட்டில் 20 ஏக்கர் நிலப்பரப்பளவில் கால்நடை தீவன மரங்களான சுபாபுல், வேம்பு, சீமை அகத்தி, கல்யாண முருங்கை மற்றும் மானாவாரி பயிர்களான கொழுக்கட்டை புல், புரதச்சத்து மிகுந்த முயில், மசால் போன்ற பசுந்தீவன பயிர்களை கொண்ட கால்நடை தீவனப்பண்ணை அமைக்கபட உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் கால்நடைப் பராமரிப்புத்துறையின் மூலம் ஓராண்டுக்கு தீவன வகைகள் வளர்த்து பராமரிக்கப்படும். இதன் மூலம் நிரந்தரமாக அப்பகுதியில் கால்நடைகளுக்கு தேவையான தீவனங்கள் நாள்தோறும் கால்நடைகள் பெற்று பயன்பெறும் வகையில் அமையும். அந்த வகையில் முதல் ஓராண்டிற்கு கால்நடைத்துறையின் மூலம் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு கால்நடைகள் வளர்ப்போர் பயன்பெறும் வகையில் இத்திட்டம் அமைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் சஞ்சீவிராஜ், சன்னதி புதுக்குளம் ஊராட்சி மன்றத்தலைவர் வாசுகிமாரி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News