செய்திகள்
பிச்சாண்டி, செல்வி

அரசு மருத்துவமனை ஊழியர் கொரோனாவுக்கு பலி - சிலமணி நேரத்தில் மனைவியும் இறந்த பரிதாபம்

Published On 2021-06-01 07:09 IST   |   Update On 2021-06-01 07:09:00 IST
கணவன்- மனைவி இருவரும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் மருத்துவமனை ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பேரணாம்பட்டு:

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகாவில் உள்ள அண்ணாநகர் கொல்லை மேடு பகுதியை சேர்ந்தவர் பிச்சாண்டி (வயது 57). பேரணாம்பட்டு அரசு மருத்துவமனை அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 21 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்தநிலையில் பிச்சாண்டியின் மனைவி செல்விக்கு (46) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிச்சாண்டி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு ஓய்வில் இருந்தார். அவருக்கு நேற்று முன்தினம் மதியம் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக பிச்சாண்டி குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த செல்வியும், கணவர் பிச்சாண்டி இறந்த சில மணி நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். கணவன்- மனைவி இருவரும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்தது பேரணாம்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இறந்த பிச்சாண்டி- செல்வி தம்பதிக்கு அகிலா (23) என்ற மகளும், வசந்தகுமார் (22), விமல் (20) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

Similar News