செய்திகள்
கொரோனா பரிசோதனை நடந்தபோது எடுத்த படம்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 521 பேருக்கு கொரோனா

Published On 2021-05-22 23:28 IST   |   Update On 2021-05-22 23:28:00 IST
வேலூர் மாவட்டத்தில் பரவிவரும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் பரவிவரும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப் பட்டபோதிலும் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தொற்று அறிகுறி இல்லாதவர்களும், பாதிப்பு குறைவாக உள்ளவர்களும் கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமும் வீடு, வீடாக மருத்துவ குழுவினர் சென்று பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர்.

நேற்று வெளியான முடிவில் மாவட்டத்தில் 521 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. சில நாட்களாக 700-ஐ தாண்டிய பாதிப்பு நேற்று சற்று குறைந்துள்ளது.

பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாவும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளார். அவர் வீட்டு தனிமையில் உள்ளார்.

போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் போலீஸ் நிலையத்தில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

காட்பாடி தாலுகாவில் நேற்று மட்டும் 82 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் மாநகராட்சி பகுதியில் 60 பேரும், கிராமப்பகுதியில் 20 பேரும், பேரூராட்சி பகுதியில் 2 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கே.வி.குப்பம் தாலுகாவில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Similar News