மூதாட்டிக்கு கொரோனா இருப்பதாக கூறி ஏமாற்றிய மகள்
வேலூர்:
வேலூரை சேர்ந்த கால்நடைத்துறை டாக்டர் ரவிசங்கர். இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்து வருகிறார்.
அதன்படி கொரோனா பாதித்தவர்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்கும் பொருட்டு அவர்களுக்கு 3 வேளையும் உணவுகள் வழங்கி வருகிறார். சில தன்னார்வலர்களும் அவருடன் இணைந்து வீடு தேடி சென்று உணவு வழங்கும் பணியை செய்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு டாக்டர் ரவிசங்கரை ஒரு பெண் தொடர்பு கொண்டு காட்பாடி தாராபடவேடு பகுதியில் ஒரு மூதாட்டிக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது.
அந்த மூதாட்டிக்கு உணவு வழங்கி உதவுங்கள் என்று கோரிக்கை வைத்தார். அதன்படி டாக்டர் அந்த மூதாட்டிக்கு தன்னார்வலர்கள் மூலம் உணவு வழங்கி வந்தார். இந்த நிலையில் அந்த மூதாட்டி டாக்டரை சந்தித்து நன்றி கூறவேண்டும் என அந்த தன்னார்வலரிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து அறிந்த டாக்டர் அந்த மூதாட்டியை சந்திக்க சென்றார். அப்போது குடிசை வீட்டில் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நடக்கமுடியாமல் இருந்தார்.
அந்த மூதாட்டிக்கு உணவு அளித்த டாக்டர், பாட்டி ஏன் முககவசம் அணியாமல் இருக்கிறீர்கள்... கவனமாக இருங்கள்... என்று கூறினார்.
அப்போது அந்த மூதாட்டி கண்ணீருடன் எனக்கு கொரோனா இல்லபா.. எனது மகள் தான், உனக்கு தினமும் சாப்பாடு வழங்க ஆட்கள் வருவார்கள்.... அவர்களிடம் கொரோனா உள்ளது என்று கூறு... அவ்வாறு கூறினால் தான் உனக்கு சாப்பாடு கிடைக்கும் என்று கூறிவிட்டு சென்றார்.
எனக்கு தினமும் உணவளித்த உங்களுக்கு மிகவும் நன்றி. எனது நன்றியை தெரிவிக்கவே தங்களை பார்க்க ஆசைப்பட்டேன் என்று தெரிவித்தார். இதைக்கேட்ட டாக்டர் அதிர்ச்சி அடைந்தார்.
அதில், அவரை தொடர்பு கொண்டு மூதாட்டிக்கு சாப்பாடு கொடுங்கள் என்று கூறிய பெண் அந்த மூதாட்டியின் மகள் என்றும், அவரால் தனது தாயாரை கவனிக்க முடியவில்லை என்பதால் உணவளிக்க இவ்வாறு பொய் கூறி உள்ளார் என்றும் தெரியவந்தது.
மக்களின் உயிரை குடிக்கும் கொரோனா, மறைமுகமாக ஒரு மூதாட்டியை உயிர் வாழ வைத்துள்ள சம்பவம் காட்பாடியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.