செய்திகள்
ஆதனக்கோட்டை அருகே ஊரடங்கிலும் விவசாய பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள்
ஆதனக்கோட்டை அருகே ஊரடங்கிலும் விவசாய பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஆதனக்கோட்டை:
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் விவசாய தொழிலுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆதனக்கோட்டை அருகே உள்ள வளவம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளர்கள் கடலைக்கொடி பிடுங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உழவுதொழிலுக்கு ஊரடங்கு போட்டால் பாதுகாப்பாக வீட்டில் இருப்பவர்களுக்கு உணவு கிடைப்பது என்பது கேள்விக்குறியாகிவிடும். கொரோனாவால் அனைவரும் வீட்டில் முடங்கி கிடந்தாலும், கொரோனா நோயாளிகளை குணப்படுத்த மருத்துவர்கள் இரவு, பகல் பாராது உழைத்து வருகின்றனர்.
அதேபோல் விவசாயிகளும் வெயில், மழை பாராது அனைத்து தரப்பினருக்கும் உணவு அளிப்பதற்காக உழைத்துக்கொண்டுள்ளனர். உலகில் எது இல்லாவிட்டாலும் விவசாயமும், மருத்துவமும் இல்லாமல் வாழவே முடியாது என்பதை இந்த இக்கட்டான தருணத்தில் விவசாயிகளின் உழைப்பு உணர்த்துகிறது.