செய்திகள்
கொரோனா தடுப்பூசி

நீலகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 4,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-04-24 02:46 GMT   |   Update On 2021-04-24 02:46 GMT
கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்துவதில் தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் முதலிடத்தில் இருக்கிறது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள் என 43 மையங்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் ஒரு நாளைக்கு எத்தனை பேருக்கு தடுப்பூசி போட உள்ளனர்? என்பதை கொண்டு சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் தடுப்பூசிகளை பெற்று செல்கின்றனர். தடுப்பூசிகள் மீதமிருந்தால் திரும்ப ஒப்படைக்கப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. தினமும் 2,500 முதல் 2,700 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

இதுகுறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி கூறியதாவது:-

சென்னையில் இருந்து நீலகிரிக்கு 12 ஆயிரம் கோவிஷில்டு தடுப்பூசி வரவழைக்கப்பட்டது. கலெக்டர் அறிவுறுத்தியதையடுத்து நேற்று முன்தினம் ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 4,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. தினமும் சராசரியாக 2,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் கூடுதலாக தடுப்பூசி கேட்கப்பட்டது. அதன்படி நீலகிரி மாவட்டத்துக்கு 8 ஆயிரம் கொரோனா தடுப்பூசி இன்று (சனிக்கிழமை) வருகிறது. இதுவரை ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 935 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

நீலகிரியில் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் என அனைத்து முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 45 வயதுக்கு மேற்பட்ட 73 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்துவதில் தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அடுத்த வாரம் முதல் தினமும் 2,000 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News