செய்திகள்
ஊட்டி ரோஜா பூங்கா சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி கிடந்த காட்சி

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை : நீலகிரியில் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடல்

Published On 2021-04-21 18:03 GMT   |   Update On 2021-04-21 18:03 GMT
கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டதால் நீலகிரியில் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. இதனால் பூங்காக்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
ஊட்டி:

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா தலங்கள் நேற்று முதல் மூடப்பட்டன. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலைச்சிகரம், தேயிலை பூங்கா, சூட்டிங்மட்டம், பைன்பாரஸ்ட், பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்களின் நுழைவுவாயில்கள் அடைக்கப்பட்டது.

அதேபோல் குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களும் மூடப்பட்டது. பூங்காவின் நுழைவாயில் மூடப்பட்டு, முன்பகுதியில் மறு உத்தரவு வரும்வரை உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் உள்ளே அனுமதி இல்லை என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருக்கிறது. தாவரவியல் பூங்கா பெரிய புல்வெளி மைதானம், நுழைவுவாயில் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடின.

ஊட்டி படகு இல்லத்தில் மிதி படகுகள், துடுப்பு படகுகள், மோட்டார் படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் இல்லாமல் படகுகள் ஓய்வு எடுத்து வருகிறது. நுழைவு டிக்கெட் வழங்குமிடம், படகு சவாரிக்கு கட்டணம் செலுத்தும் இடம் உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. ஊட்டி ரோஜா பூங்காவில் நுழைவுவாயில் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டது. சுற்றுலா தலங்கள் அருகே கடைகளை வைத்து நடத்தி வரும் வியாபாரிகள், நேற்று கடைகளை திறந்து வைத்தும் வியாபாரம் இல்லாததால் அவதி அடைந்தனர். இதனால் கடைகளை மூடினர்.

ஊட்டி படகு இல்ல வளாகத்தில் கடைகளில் உள்ள பொருட்களை வியாபாரிகள் வெளியே எடுத்து கடைகளை காலி செய்து சென்றனர். சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான ஊட்டிக்கு வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டதால், கடந்த ஆண்டை போல் மீண்டும் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடிய நிலையில் காட்சி அளிக்கிறது. இதனால் நடப்பாண்டில் அடுத்த மாதம் நடைபெறும் கோடை சீசன் நடத்துவது கேள்விக்குறியாகி உள்ளது. ஊட்டி அரசு அருங்காட்சியகம் மூடப்பட்டது.

கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக ஊட்டியில் சுற்றுலா தலங்கள் மார்ச் 17-ந் தேதி முதல் செப்டம்பர் 8-ந் தேதி வரை மூடப்பட்டன. பின்னர் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி திறக்கப்பட்டது. தற்போது மீண்டும் மூடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News