செய்திகள்
மரங்களில் விளைந்த பலாக்காய்களை வனத்துறையினர் வெட்டி தரையில் போட்டுள்ளதை காணலாம்.

காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க பலாக்காய்கள் அகற்றம்

Published On 2021-04-19 10:09 GMT   |   Update On 2021-04-19 10:09 GMT
கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க பலாக்காய்களை வனத்துறையினர் அகற்றி வருகிறார்கள். இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
கூடலூர்:

கூடலூர் பகுதியில் தொரப்பள்ளி, நாடுகாணி, தேவாலா, பாண்டியாறு ரேஞ்ச் எண்.4 காட்டு யானைகள் ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்து வருகிறது. வீடுகள் மற்றும் விவசாய பயிர்களை தினமும் சேதப்படுத்தி வருகிறது. இதேபோல் பந்தலூர் தாலுகா பகுதியிலும் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

வனப்பகுதியில் போதிய பசுந்தீவனம் கிடைக்காததால் காட்டு யானைகள் அதிகளவு ஊருக்குள் வருவதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் இரவு பகலாக காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து அந்தந்த பகுதி மக்களை உஷார் படுத்தி வருகின்றனர். இதேபோல் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கூடலூர் பகுதியில் பலாப்பழ சீசன் தொடங்கி உள்ளது. இதனால் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதற்கு ஒரு காரணமாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதனால் கூடலூர் பகுதியில் மரங்களில் விளைந்த பலாக்காய்களை வனத்துறையினர் கடந்த ஒரு வாரமாக வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் பலாக்காய்களும் எந்த பயனும் இன்றி வீணாகி வருகிறது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் நடந்து செல்லும் பாதைகளில் விதிமுறைகளை மீறி மின்வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் யானைகள் வழிமாறி ஊருக்குள் வருகிறது. இதுதவிர காட்டு யானைகள் ஊருக்குள் வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

ஆனால் வனத்துறையினர் விவசாய நிலங்களில் வளர்ந்து உள்ள பல காய்களை வெட்டினால் காட்டு யானைகள் வராது என கூறியவாறு மரங்களில் உள்ள காய்களை அகற்றி வருகின்றனர். காட்டுயானைகளுக்கு பலாப்பழ சீசன் குறித்து நன்கு அறியும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் மரங்கள் உள்ள இடங்களுக்கு காட்டு யானைகள் வந்து செல்கிறது.

தற்போது வனத்துறையினர் பலாக்காய்களை வெட்டி அப்புறப்படுத்துவதால் ஏமாற்றம் அடையும் காட்டு யானைகள் பொதுமக்களின் வீடுகளை சேதப்படுத்தி உணவு பொருட்களை தின்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

இதனால் காட்டு யானைகளால் பிரச்சினை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் பலா காய்களை வெட்டுவதால் விவசாயிகளுக்கும் இழப்பு ஏற்படுகிறது. எனவே வனத்துறையினர் பலாக்காய்களை வெட்டக்கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News