செய்திகள்
மரக்கன்று நடும் விழாவில் நடிகர் விவேக் பேசிய காட்சி. அருகில் நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உள்ளார்

நீலகிரி மாவட்டத்தில் நடிகர் விவேக் ஆதரவால் 4 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டது - கலெக்டர் இன்னசென்ட் திவ்யா இரங்கல்

Published On 2021-04-18 07:19 GMT   |   Update On 2021-04-18 07:19 GMT
நடிகர் விவேக் மறைவை தொடர்ந்து அவருடன் பங்கேற்ற நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

ஊட்டி:

சின்னக்கலைவாணர் என ரசிகர்களால் அழைக்கப்பட்ட நடிகர் விவேக் நேற்று மரணம் அடைந்தார்.

இவரது மறைவுக்கு தமிழகம் முழுவதும் சிறுவர்கள், இளைஞர்கள் என அனைவரும் மரக்கன்றுகள் நட்டு தங்களது அஞ்சலியை செலுத்தினர்.

கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் 21-ந் தேதி உலக வன நாளையொட்டி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 2 லட்சம் மரக்கன்றுகள் நடுவதை தொடங்கி வைத்து பேசினார்.

அதில், நீலகிரி பசுமையான மாவட்டம். இதை பாதுகாப்பது நமது கடமை, மலைகளின் அரசியை மலைகளின் கிழவியாக மாற்ற வேண்டாம். நீலகிரியை பாதுகாக்க அனைவரும் மரம் நட வேண்டும் என்று தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

நடிகர் விவேக் மறைவை தொடர்ந்து அவருடன் பங்கேற்ற நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் பசுமையை காக்கும் வகையில் விழிப்புணர்வை பரப்புவதற்காக தனது பிரபல அந்தஸ்தை கொடுக்க எப்போது தயாராக இருக்கும் ஒர் இணக்கமான ஆளுமை.

இவரது ஆதரவுடன் நீலகிரி மாவட்டத்தில் 4 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய முடிந்தது. நீலகிரி மக்கள் எப்போதும் விவேக்கை தங்கள் அன்பாக நினைவு கொண்டிருப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

ஊட்டி அடுத்துள்ளது பகல்கோடு என்ற பகுதி. இங்கு தோடர் பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள். விவேக் இறந்ததை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தங்கள் பகுதியில் மரக்கன்றுகளை நட்டு வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். இதேபோல் ஊட்டி முத்தோரையில் உள்ள அப்துல் கலாம் ஆதரவற்றோர் காப்பகத்திலும் விவேக் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி மரக்கன்றுகள் நடப்பட்து.


நடிகர் விவேக் நீலகிரி மாவட்டம் குன்னூர் ஓட்டுபட்டறையில் உள்ள சாந்தி விஜய் ஆரம்ப பள்ளியில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை படித்தார். சமீபத்தில் குன்னூர் சென்றிருந்த விவேக் அங்கு பணியாற்றிய ஆசியர்கள், மாணவர்களுடன் தனது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். விவேக் பள்ளிக்கு வந்து கலகலப்பாக பேசிச் சென்றதை இப்போது நினைவு கூறும் அங்குள்ள ஆசிரியர்களும், மாணவர்களும் கண் கலங்கினர்.

கோவை மாவட்டத்தில் விவேக் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கோவை ரேஸ்கோர்ஸ், சாய்பாபா காலனி, குனியமுத்தூர் பகுதிகளில் தேவைப்படுவோருக்கு 100 மரக்கன்றுகளை வழங்கிய தோடு, பல்வேறு இடங்களில் 100 மரக்கன்றுகளையும் நட்டு வைத்தனர். இதேபோல் கீரணத்தம் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடவு செய்து அஞ்சலியை செலுத்தினர்.

ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு தனது டுவிட்டர் பதிவில், தமிழ்நாட்டின் மாபெரும் மரங்கள் நடும் திட்டத்தை தொடங்கிய விவேக் என்றும் நம் நினைவில் நிற்பார். அவர் இதயம் இந்த மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் துடித்தது என கூறியுள்ளார்.

Tags:    

Similar News