செய்திகள்
நடிகர் விவேக் நினைவாக குடியாத்தம் அடுத்த உள்ளி கிராம பாலாற்று படுகையில் மரக்கன்றுகள் நடப்பட்ட காட்சி

நடிகர் விவேக் நினைவாக பாலாற்றுப் படுகையில் 500 மரக்கன்றுகள் நடப்பட்டது

Published On 2021-04-18 05:15 GMT   |   Update On 2021-04-18 05:15 GMT
நடிகர் விவேக்கின் கனவை நனவாக்கும் வகையில் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த உள்ளி கிராமத்தில் பாலாற்று படுகையில் 500 மரக்கன்றுகள் நடப்பட்டன.

வேலூர்:

நகைக்சுவை நடிகரும் சமூக ஆர்வலருமான விவேக் உடல் நலக்குறைவால் நேற்று மரணமடைந்தார்.

நடிகர் விவேக் நடிப்பின் மூலம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். திரை உலகைத் தாண்டி பொது வாழ்க்கையிலும் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

குறிப்பாக மரக்கன்றுகள் நட வேண்டியதன் அவசியம் குறித்து அவர் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டார். அவரது கனவை நனவாக்கும் வகையில் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த உள்ளி கிராமத்தில் பாலாற்று படுகையில் 500 மரக்கன்றுகள் நடப்பட்டன.


உள்ளி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் தமிழக அரசின் உதவியுடன் ஏற்கனவே ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார். விவேக்கின் மறைவையடுத்து கூடுதலாக 500 மரக்கன்றுகள் நடும் பணியை அவர் தொடங்கினார்.

அவருக்கு உதவியாக உள்ளி ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் பணிபுரியும் தொழிலாளர்கள் மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஒரு ஆண்டுக்கு அவர்கள் மரக்கன்றுகள் பராமரிக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்படுவர் என ஊராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நடிகர் விவேக் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வேலூரை சேர்ந்த சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் வீடு வீடாக சென்று 100 மரக்கன்றுகளை வழங்கினார்.

Tags:    

Similar News