செய்திகள்
மாநகராட்சி கமிஷனர் சங்கரன் தொடங்கி வைத்து பார்வையிட்டபோது எடுத்த படம்.

வேலூர் மாநகராட்சி பகுதியில் 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது - கமிஷனர் தகவல்

Published On 2021-04-15 18:07 GMT   |   Update On 2021-04-15 18:07 GMT
வேலூர் மாவட்ட சுகாதாரத்துறை, வேலூர் மாநகராட்சி, வட்டார போக்குவரத்துத்துறை சார்பில் வேலூர் மாநகராட்சி பகுதியில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
வேலூர்:

வேலூர் மாநகராட்சி பகுதியில் இதுவரை 45 வயதுக்கு மேற்பட்ட 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று கமிஷனர் சங்கரன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்ட சுகாதாரத்துறை, வேலூர் மாநகராட்சி, வட்டார போக்குவரத்துத்துறை சார்பில் வேலூர் மாநகராட்சி பகுதியில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

ஓட்டேரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த தடுப்பூசி முகாமை மாநகராட்சி கமிஷனர் சங்கரன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது அங்கு தடுப்பூசி போட வரும் பொதுமக்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும், முகாம் குறித்து விழிப்புணர்வு பற்றியும் மாநகராட்சி அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் கமிஷனர் கூறுகையில், வேலூர் மாநகராட்சி பகுதியில் 5 லட்சத்து 15 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள். அவர்களில் 1 லட்சத்து 86 ஆயிரம் பேர் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். அரசு மருத்துவமனைகள், நகர்புற சுகாதார நிலையங்கள், தடுப்பூசி முகாம்களில் 45 வயதுக்கு மேற்பட்ட 35 ஆயிரம் பேர், தனியார் மருத்துவமனைகளில் 25 ஆயிரம் பேர் என்று மொத்தம் 60 ஆயிரம் பேருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அனைத்து வார்டுகளிலும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படும். முகாமில் தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் குறித்து வீடு, வீடாக ஆய்வு செய்யப்படும். அதன்பின்னர் அவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்தார்.

முகாமில், வேலூர் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் கருணாநிதி, 3-வது மண்டல உதவிகமிஷனர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று வேலூர்-ஆற்காடு சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் நடந்த முகாமில் ஆட்டோ டிரைவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அந்த வழியாக வந்த ஆட்டோக்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நிறுத்தி சோதனை செய்து, தடுப்பூசி போடாத டிரைவர்களை முகாமில் தடுப்பூசி போடும்படி அறிவுறுத்தினர்.
Tags:    

Similar News