செய்திகள்
விபத்து

பள்ளிகொண்டா அருகே தனியார் பஸ் மோதி பெண் பலி

Published On 2021-04-10 11:43 GMT   |   Update On 2021-04-10 11:43 GMT
பள்ளிகொண்டா அருகே தனியார் பஸ் மோதி பெண் பரிதாபமாக இறந்தார். கணவர் படுகாயம் அடைந்தார்.
அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் எழில் நகர் பகுதியை சேர்ந்தவர் அன்பரசு. இவரது மகன் முரளி (வயது 38). வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். விடுமுறையில் வந்த இவர் தன் மனைவி அனிதாவை அழைத்துக் கொண்டு நேற்று காலை குடியாத்தத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசலில் இருக்கும் உறவினரைப் பார்க்க சென்றார்.

மோட்டார் சைக்கிளை அனிதா ஓட்டிச் சென்றார் பள்ளிகொண்டா அருகே கந்தனேரி தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது வேலூரில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்ற தனியார் பஸ் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் கணவன்-மனைவி 2பேரும் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்ததும் பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனிதாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர்.

முரளிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்த அனிதாவிற்கு 11 மாத குழந்தை உள்ளது.

இந்த விபத்து குறித்து முரளியின் தந்தை அன்பரசு பள்ளிகொண்டா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து தனியார் பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. விபத்தினை தடுக்க போலீசார் சிவப்பு விளக்குகள் மற்றும் தடுப்பு வேலிகளை அமைத்தும் வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மதிக்காமல் அதிவேகமாக வாகனங்களை ஓட்டி வருகின்றனர். எனவே, இந்தப் பகுதியில் சுழற்சி முறையில் போலீசாரை பாதுகாப்பு பணியில் நிறுத்த வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News