செய்திகள்
கோப்புபடம்

விருத்தாசலம் அருகே கோவில் தர்மகர்த்தா அடித்துக் கொலை - போலீசார் விசாரணை

Published On 2021-04-10 11:35 GMT   |   Update On 2021-04-10 11:35 GMT
விருத்தாசலம் அருகே கோவில் தர்மகர்த்தா அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மேலப்பாளையூர் கிராமத்தை சேர்ந்தவர் தவலிங்க செல்வராயர்(வயது 72). இவர் அப்பகுதியில் உள்ள கோவில்களுக்கு தர்மகர்த்தாவாக இருந்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டில் இருந்தபோது, அவரது செல்போன் எண்ணுக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து தவலிங்க செல்வராயர், வீட்டில் உள்ளவர்களிடம் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் தவலிங்க செல்வராயரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இருப்பினும் அவரை பற்றிய எந்தவொரு தகவலும் இல்லை.

இந்த நிலையில் நேற்று காலையில் அதே கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே ஒரு விவசாய நிலத்தில் ரத்தக்காயங்களுடன், தவலிங்க செல்வராயர் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கும், அவரது உறவினருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அவரது உறவினர்கள் விரைந்து வந்து தவலிங்க செல்வராயரின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதற்கிடையே கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். அதில் தவலிங்க செல்வராயரை மர்மநபர்கள் யாரோ அடித்துக் கொலை செய்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. ஆனால் அவரை கொலை செய்தவர்கள் யார்? கொலை செய்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை.

இதற்கிடையே கடலூரில் இருந்து மோப்பநாய் புருனோ வரவழைக்கப்பட்டது. அது கொலை செய்யப்பட்டவரின் உடலை மோப்பம்பிடித்த படி இறந்தவரின் வீடு வரை சென்று மீண்டும் அதே இடத்திற்கு திரும்பி வந்தது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் தடயவியல் நிபுணர்கள், தடயங்களை சேகரித்து சென்றனர்.

முன் விரோதத்தின் காரணமாக தவலிங்க செல்வராயரை யாரேனும் அடித்துக் கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் தர்மகர்த்தா கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இறந்த தவலிங்க செல்வராயருக்கு புஷ்பவல்லி என்ற மனைவியும், 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

Tags:    

Similar News