செய்திகள்
டெங்கு காய்ச்சல்

கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் 2 பேர் பாதிப்பு

Published On 2021-04-09 10:16 GMT   |   Update On 2021-04-09 10:16 GMT
கடலூர் மாவட்டத்தில் 2 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடலூர்:

உலக நாடுகளை கடந்த ஓராண்டுக்கும் மேலாக தனது கட்டுக்குள் வைத்திருந்த கொரோனா வைரஸ், கடந்த 3 மாதமாக குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக கொரோனா 2-வது அலையின் காரணமாக தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்த ஓராண்டாக மக்கள் டெங்கு காய்ச்சல் பற்றி சிந்திக்க கூடவில்லை.

ஆனாலும் ஒரு புறம் கொரோனா வைரஸ் வேகமாக பரவிக்கொண்டிருக்கும் நிலையில், மற்றொரு புறம் டெங்கு காய்ச்சலும் கடலூர் மாவட்டத்தில் பரவி வருகிறது. தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 பேர், கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

வடலூர் அடுத்த கருங்குழி பகுதியை சேர்ந்தவர் 21 வயது வாலிபர். கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர், அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இருப்பினும் அவருக்கு காய்ச்சல் குணமாகவில்லை. இந்த நிலையில் அவர், சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ரத்த மாதிரி எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த வாலிபர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேபோல் கடலூரை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், திண்டுக்கல்லில் வேலை பார்த்து வருகிறார். அப்போது காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர், அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இருப்பினும் அவருக்கு காய்ச்சல் குறையவில்லை. இதனால் சொந்த ஊருக்கு திரும்பிய அவர், கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவருக்கு கொரோனா மற்றும் டெங்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அந்த வாலிபர், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனா வைரஸ் பரவி வரும் சூழ்நிலையில், தற்போது 2 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News