செய்திகள்
சாவிலும் பிரியாமல் மறைந்த நண்பர்கள் மகாலிங்கம்- ஜெய்லாபுதீனுக்கு ஊர் மக்கள் வைத்துள்ள கண்ணீர் அஞ்சலி பேனர்.

40 ஆண்டு கால நண்பர்களை சாவிலும் பிரிக்காமல் அழைத்து சென்ற காலன்

Published On 2021-04-09 15:03 IST   |   Update On 2021-04-09 15:33:00 IST
இல்லற வாழ்க்கையை ஒன்றாக வாழ்ந்து மறைந்த தம்பதி பற்றி அறிந்திருக்கிறோம், ஆனால் நட்பால் இணைந்து, சாவிலும் பிரியாதவர்கள் பற்றி இப்போதுதான் அறிகிறோம்.
ஜெயங்கொண்டம்:

உண்மையான நட்பு என்பது விலைமதிக்க முடியாத பரிசு, அதை மதிப்பிட வேண்டும், எந்த நேரத்திலும் இழக்க கூடாது. அப்படி ஒரு நட்பு நமக்கு கிடைத்தால் இந்த உலகில் நாம் தான் சிறந்த அதிர்ஷ்டசாலி. நட்பு என்பது எப்போதும் தன்னலமற்ற உதவியை வெளிப்படுத்துகிறது. அந்த நட்பானது பல ஆண்டு காலம் பிணைப்பை உறுதிப்படுத்துகிறது.

பரஸ்பர புரிதலும், மரியாதையையும் இக்காலம் முதல் எக்காலமும் கொண்டு செல்லும் உன்னதம் வாய்ந்தது நட்பு. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு என்ற வள்ளுவரின் குறள் முகம் மலரும் படியாக நட்பு செய்வதைவிட, நெஞ்சம் மலரும் படியாக உள்ளன்போடு கூடிய நட்பே சிறந்தது என்கிறது.

அதற்கு இலக்கணமாய் கடந்த 40 ஆண்டு காலம் வாழ்ந்ததோடு, ஒன்றாகவே மறைந்த நண்பர்கள் இன்று அனைவராலும் பேசப்படும் நபர்களாகி உள்ளனர். இதேபோல் நட்புக்கு இலக்கணம் வகுத்தவர்கள் எத்தனையோ பேர் இருந்தாலும் மதம் கடந்த இவர்களின் நட்பு சாலச்சிறந்தது.

அரியலூர் அருகே இரு வேறு மதத்தைச் சேர்ந்த இணைபிரியாத நண்பர்கள் இறப்பிலும் ஒன்றாக இறந்தது பெரும் சோகத்தையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஜூபிலி ரோட்டில் அல்லா கோவில் அருகே வசித்து வருபவர் மகாலிங்கம் (வயது 78). இவர் அதே பகுதியில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் பூசாரியாக உள்ளார். மன திருப்திக்காக பூசாரியாகவும், வயிற்று பிழைப்புக்காக சிறிய டீக்கடை ஒன்றையும் நடத்தி வந்தார்.

இவர் வீட்டின் எதிர் புறம் வசித்து வருபவர் ஜெய்லா புதீன் (66). இவர் அதே தெருவில் ஒரு ரைஸ்மில் நடத்தி வருகிறார். இவர்கள் இருவரும் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக இணை பிரியாத நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.

ஓய்வு நேரங்களில் மகாலிங்கம் நடத்தி வந்த டீக்கடைக்கு வருகை தரும் ஜெய்லாபுதீன், தங்களது நட்புக்கு அடித்தளமிட்டனர். 12 வயது மூத்தவராக இருந்தபோதிலும் மகாலிங்கம் உறவை மீறிய நட்பு கிடைத்த மகிழ்ச்சியில் உறவுக்காரர்களிடம் கூட பேச தயங்கிய வி‌ஷயங்களை ஜெய்லாபுதீனிடம் பகிர்ந்து மன ஆறுதல் அடைந்தார். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பே தோளில் கை போட்டவாறு பேசத் தொடங்கிய அவர்களின் நட்பை பார்த்து வியக்காதவர்களே கிடையாது.

காலப்போக்கில் அவர்களின் நட்பானது இருவீட்டாரையும் இணைய வைத்தது. மகாலிங்கம் வீட்டில் சுப காரியங்கள் நடந்தாலும் பண்டிகை காலங்களாக இருந்தாலும் ஜெய்லாபுதீன் கலந்து கொள்வார். அதேபோல் ஜெய்லாபுதீன் வீட்டில் சுபகாரியங்கள் பண்டிகை காலங்களிலும் மகாலிங்கம் கலந்து கொண்டு உணவு பதார்த்தங்களை பரிமாறிக்கொள்வார்கள்.

வயது முதிர்வால் முன்பு போல இருக்க முடியவில்லையே என்று ஏங்கித்தவித்த மகாலிங்கத்திற்கு நான் இருக்கிறேன், உனக்கு ஒன்றும் ஆகாது என்று கூறியதோடு, நமது நட்பை இந்த உலகம் பாராட்டும் என்று அடிக்கடி கூறி வந்துள்ளார். வாழ்க்கையோ, தொழிலோ எதுவாக இருந்தாலும் இருவரும் ஒருவருக்கொருவர் பேசி எடுக்கும் முடிவுதான் இன்றளவும் நடந்துள்ளது.

நகமும், சதையுமாக இருந்த அவர்களது நட்புக்கு எமனாக இருவருக்குமே உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஜெயங்கொண்டம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளனர். பிரிவு என்பது மருத்துவமனையில் கூட இருக்கக்கூடாது என்ற அவர்களது அன்பு வேண்டுகோளுக்கு இணங்க அருகருகே இருந்த படுக்கையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் ஜெய்லாபுதீன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மகாலிங்கம் அடுத்த 10 நிமிடத்திற்குள் உயிரிழந்தார்.

இல்லற வாழ்க்கையை ஒன்றாக வாழ்ந்து மறைந்த தம்பதி பற்றி அறிந்திருக்கிறோம், ஆனால் நட்பால் இணைந்து, சாவிலும் பிரியாதவர்கள் பற்றி இப்போதுதான் அறிகிறோம்.

இதுகுறித்து இருவரின் மகன்களும் கூறுகையில் “எங்களின் தாத்தா முதல் தலைமுறை, தந்தை இரண்டாம் தலைமுறை. இதை தொடர்ந்து நாங்களும் மூன்றாவது தலைமுறையாக இதேபோல் ஒற்றுமையாக இருக்கிறோம். அவர்கள் கற்றுத்தந்த வாழ்வியல் பாடங்கள் ஏராளம். அவை அனைத்தும் எங்கள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துள்ளது. இனிவரும் காலங்களில் உற்றார் உறவினர்களை போல் சுப, துக்க காரியங்களில் ஒன்றிணைந்து மதங்களை கடந்து நாங்கள் நட்புடன் தொடர்வோம். எங்களின் தாத்தா தந்தை ஆகியோரின் ஆசையும் அது தான்” என்று பெருமையுடன் கூறினர்.

உறவுகளிடம் கூட நிலைக்காத நட்பு நண்பர்களிடத்து நங்கூரமாக நிற்கிறது. அந்த வகையில் வாழ்ந்து மறைந்த ஜெய்லாபுதீன், மகாலிங்கம் மறைந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

Similar News