செய்திகள்
கைது

கடலூரில் பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த டிரைவர் கைது

Published On 2021-04-01 16:26 IST   |   Update On 2021-04-01 16:26:00 IST
கடலூரில் பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த டிரைவரை கைது செய்த போலீசார், சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
கடலூர்:

கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் 13 வயது மாணவி. இவள், மஞ்சக்குப்பம் வேணுகோபாலபுரத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறாள். சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவியை திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும், மாணவி கிடைக்கவில்லை.

இந்த நிலையில் மாணவியின் உறவினர் ஒருவருடைய வாட்ஸ்-அப் எண்ணுக்கு, மாணவி கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்த டிரைவரான பிரசாந்த் (வயது 21) என்பவரை திருமணம் செய்து கொண்டது போன்ற புகைப்படம் வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர், உடனே மாணவியின் பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து மாணவியின் தாய், தனது மகளை புதுப்பாளையத்தை சேர்ந்த பிரசாந்த் கடத்தி சென்று திருமணம் செய்து விட்டதாக கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை கடத்தி சென்ற பிரசாந்தை தேடினர். அப்போது புதுப்பாளையத்தில் மாணவியுடன் நின்று கொண்டிருந்த பிரசாந்தை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் சிறுமியை மீட்டு, அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Similar News