செய்திகள்
கோப்பு படம்.

வேலூர் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா- ஒரே நாளில் 31 பேருக்கு பாதிப்பு

Published On 2021-03-29 17:30 IST   |   Update On 2021-03-29 17:30:00 IST
வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. பொது இடங்களில் முககவசம் அணியாமல் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்படுகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

மேலும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனாலும் கொரோனா வைரசின் பரவல் கடந்த சில நாட்களாக அதிகமாகி கொண்டே செல்கிறது.

வேலூர் மாவட்டத்தில் இந்த மாத தொடக்கத்தில் 10-க்கும் குறைவான நபர்களுக்கே தொற்று கண்டறியப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக 20-க்கும் மேற்பட்டோருக்கு தொற்றின் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டு வருகிறது.

நேற்றைய பரிசோதனை முடிவில் 31 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 31 பேரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் உடன் பணிபுரிந்தவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News