செய்திகள்
கூடலூர் அருகே காட்டுயானை சேதப்படுத்தி உள்ள வாழைகளை காணலாம்

ஸ்ரீமதுரை ஊராட்சியில் வீடு, வாழைகளை சேதப்படுத்தி காட்டுயானைகள் அட்டகாசம்

Published On 2021-03-27 10:02 GMT   |   Update On 2021-03-27 10:02 GMT
ஸ்ரீமதுரை ஊராட்சியில் வீடு, வாழைகளை சேதப்படுத்தி காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன.
கூடலூர்:

கூடலூர், முதுமலை வனப்பகுதியில் இருந்து காட்டுயானைகள் வெளியேறி ஊருக்குள் வருகின்றன. இதனால் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முதுமலை புலிகள் காப்பக கரையோரத்தில் ஸ்ரீமதுரை ஊராட்சி உள்ளது. இந்த பகுதியில் காட்டுயானைகள் இரவில் புகுந்து வீடுகள், விவசாய பயிர்களை தினமும் சேதப்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த ஊராட்சிக்கு உட்பட்ட ஓடக்கொல்லி பகுதியை சேர்ந்த பெண் தொழிலாளியின் வீட்டை காட்டு யானை உடைத்து சேதப்படுத்தியது.

இந்த சமயத்தில் வீட்டில் தனியாக இருந்த அந்த பெண், பின்பக்க வாசல் வழியாக வெளியே தப்பி ஓடி உயிர் பிழைத்தார். பின்னர் கிராம மக்கள் திரண்டு வந்து காட்டு யானையை விரட்டி அடித்தனர். இருப்பினும் காட்டுயானை தொடர்ந்து அப்பகுதிக்கு வருகிறது. மேலும் அப்பகுதியில் பயிரிட்டுள்ள வாழைகளை தினமும் தின்று சேதப்படுத்தி அட்டகாசம்செய்து வருகிறது. இதுவரை 400-க்கும் மேற்பட்ட வாழைகளை காட்டு யானை நாசம் செய்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இதேபோன்று கூடலூர் அருகே முன்டக்குன்னு பகுதியில் காட்டுயானைகள் நுழைந்து அட்டகாசம் செய்து வருகிறது. நேற்று முன்தினம் அப்பகுதியை சேர்ந்த ஆதிவாசி ஒருவரது வீட்டை காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தின. இதனால் ஆதிவாசி மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கூறியதாவது:-

கூடலூர் பகுதியில் கோடைகாலத்தையொட்டி வறட்சி காணப்படுகிறது. இதனால் வனப்பகுதியில் போதிய பசுந்தீவனம் கிடைப்பதில்லை. நீர்நிலைகளும் வறண்டு விட்டதால் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் அதிகளவு வருகிறது. இதை தடுக்க வரும் நாட்களில் வனப்பகுதியில் பசுந்தீவனத்தை பெருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அகழிகளை ஆழப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Tags:    

Similar News