செய்திகள்
கைது

கி.வீரமணி பொதுக்கூட்டத்தில் கல் வீச்சு- இந்து முன்னணி பொறுப்பாளர் உள்பட 3 பேர் கைது

Published On 2021-03-26 17:54 GMT   |   Update On 2021-03-26 17:54 GMT
கோபிசெட்டிபாளையம் அருகே கி.வீரமணி பொதுக்கூட்டத்தில் கல்வீசிய இந்து முன்னணி பொறுப்பாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நம்பியூர்:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் பகுதியில் நேற்று மாலை திராவிட கழக தலைவர் கி.வீரமணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது திராவிட கழக மாவட்ட இளைஞரணி செயலாளர் வெற்றிவேல் என்பவர் தி.மு.க.வை ஏன் ஆதரிக்கவேண்டும் என்ற புத்தகத்தை கொடுத்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் வெற்றிவேலுவுடன் தகராறு செய்தனர். பின்னர் பொதுக்கூட்டத்தில் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு கல் வெற்றிவேல் மீது விழுந்து அவர் படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து அங்கு இருந்தவர்கள் வெற்றிவேலை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி நம்பியூர் பஸ் நிலையம் முன்பு தி.மு.க, திராவிடர் கழகம், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் கூட்டணி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கல் வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து அவர்கள் போராட்டதை கைவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து திராவிடர் கழக மாவட்ட இளைஞரணி செயலாளர் வெற்றிவேல் நம்பியூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நம்பியூர் அருகே உள்ள கெடாரை பகுதியை சேர்ந்த இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் பழனிச்சாமி, விக்னேஷ், கார்த்தி ஆகிய 3 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோபி 2-வது மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தி கோபி சிறையில் அடைத்தனர். மேலும் இது தொடர்பாக 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

Tags:    

Similar News