செய்திகள்
சைதாப்பேட்டை, பாஸ்கல் நாயுடு தெருவில் உள்ள ஒரு முதியவர் தபால் வாக்கு செலுத்திய போது எடுத்த படம்

மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் தபால் ஓட்டு போட்டனர் - வீட்டுக்கே சென்று 52 குழுக்கள் வாக்கு சேகரிப்பு

Published On 2021-03-26 19:44 IST   |   Update On 2021-03-26 19:44:00 IST
மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் தபால் ஓட்டு போட்டனர். அவர்களின் வீட்டுக்கே சென்று 52 குழுக்கள் வாக்கு சேகரித்தனர்.
வேலூர்:

சட்டமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று வாக்களிக்க முடியாதவர்கள் அவர்களின் வசதிக்காக இந்த தேர்தலில் தபால் ஓட்டு போட வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அவர்களின் வீடுகளுக்கு தேர்தல் அதிகாரிகள் சென்று தபால் ஓட்டு போட விருப்பமா? என கேட்டறிந்தனர். அதில் விருப்பம் தெரிவித்தவர்களுக்கு தபால் ஓட்டுபோட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 10 முதல் 15 குழுக்கள் வரை என மாவட்டம் முழுவதும் 52 குழுக்கள் அமைக்கப்பட்டது. இக்குழுவில் தேர்தல் அதிகாரிகள், போலீசார் இடம் பெற்றிருந்தனர்.

அக்குழுவினர் தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்த மாற்றுத்திறனாளிகள், 80 வயது நிரம்பியவர்கள் என மொத்தம் 3,160 பேரின் வீடுகளுக்கு நேற்று சென்றனர். வீட்டில் இருந்தவர்களிடம் தபால் வாக்கு பெற்று கவரில் வைத்து, அதை பெரிய உறை கவரில் வைத்து மூடினர். இவ்வாறு பெறப்பட்ட தபால் வாக்குகள் தாலுகா அலுவலகம் கொண்டு செல்லப்பட்டு அங்கு பாதுகாப்பான முறையில் பெட்டியில் பூட்டி வைக்கப்பட்டது.

நேற்றைய தினத்தில் தபால் வாக்கு செலுத்த தவறியவர்களை இக்குழுவினர் மற்றொரு நாளில் சந்திப்பார்கள். அன்று அவர்கள் தபால் வாக்கு செலுத்தலாம். அன்றும் அவர்கள் தபால் வாக்கு செலுத்த தவறினால் அவர்கள் வாக்கு செலுத்த முடியாது என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News