செய்திகள்
பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பிரேமலதாவை சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை செய்ய அழைப்பு விடுத்த காட்சி.

பிரேமலதாவை கொரோனா பரிசோதனை செய்ய அழைப்பு- அதிகாரிகளுடன் வாக்குவாதம்

Published On 2021-03-24 14:29 IST   |   Update On 2021-03-24 14:29:00 IST
விருத்தாசலம் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளராக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார்.
விருத்தாசலம்:

விருத்தாசலம் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளராக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். இவர் கடந்த 19-ந்தேதி தனது தம்பி சுதீஷ் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

அன்று மாலை சுதீசுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே சுதீஷ் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தன்னை பரிசோதித்து கொண்டார்.

அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சுதீஷ் ஆஸ்பத்திரியில் தனிமைபடுத்தப்பட்டு கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையில் வேட்பு மனு தாக்கல் செய்த போது இருந்த அதிகாரிகள், வேட்பாளர் பிரேமலதா ஆகியோருக்கும் கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என பரபரப்பாக பேசப்பட்டது.

இதனை தொடர்ந்து வேட்புமனு தாக்கலின் போது பணியில் இருந்த தேர்தல் பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

தற்போது வேட்பாளர் பிரேமலதா தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இன்று காலை விருத்தாசலம் ஷெராமிக் தொழிற்பேட்டையில் பிரேமலதா வாக்கு சேகரித்து கொண்டிருந்தார். அப்போது சுகாதாரத்துறை ஆய்வாளர் ராஜா தலைமையிலான மருத்துவ குழுவினர் அங்கு வந்தனர்.

வேட்பாளர் பிரேமலதாவிடம் கொரோனா பரிசோதனை எடுக்க வேண்டும் என்று மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர். இதற்கு அங்கிருந்த தே.மு.தி.க. நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும், தே.மு.தி.க. நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை சமரசம் செய்தனர்.

உடனே பிரேமலதா நான் தற்போது பிரசாரத்தில் உள்ளேன். மாலை இது பற்றி உங்களிடம் தெரிவிக்கிறேன் என்றார். அதன் பின்னர் அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி கூறுகையில், குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தால் அவருடன் தொடர்பில் இருக்கும் நபர்களையும் கொரோனா பரிசோதனைக்கு அழைப்பது வழக்கம். அந்த எண்ணத்தில் பிரேமலதாவை கொரோனா பரிசோதனை செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்று அவர் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார்.

Similar News