செய்திகள்
மக்கள் ஆதரவுடன் அ.ம.மு.க. ஆட்சியை பிடிக்கும் - டி.டி.வி.தினகரன்
மக்கள் ஆதரவுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆட்சியை பிடிக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசினார்.
நெய்வேலி:
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கடலூர் மாவட்ட அ.ம.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் பிரசார பொதுக்கூட்டம் நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டிவி.தினகரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மாற்றத்தை உருவாக்கும் சக்தியாக உருவாகி உள்ளது. தீய சக்தி என அடையாளம் காட்டப்பட்ட தி.மு.க.வையும், நம்பிக்கை துரோகம் செய்த பழனிசாமி கூட்டணியையும் எதிர்த்து போட்டியிட உள்ளோம். மக்கள் ஆதரவுடன் அ.ம.மு.க. ஆட்சியை பிடிக்கும். தி.மு.க. ஐபேக் நிறுவனத்தை நம்பி உள்ளது. பழனிசாமி பணமூட்டையை நம்பி உள்ளார். எதிர்க்கட்சியினர் தேர்தல் அறிக்கை மூலம் மக்களை ஏமாற்ற பார்க்கின்றனர். இந்த தேர்தல் அவர்களுக்கு ஏமாற்றத்தை தரவேண்டும். பணத்தை கொடுத்து மக்களை விலைக்கு வாங்க முடியாது என்பதை புரிய வைக்க வேண்டும்.
அ.ம.மு.க. தேர்தல் அறிக்கையில் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்கும் திட்டத்தை அறிவித்து உள்ளோம். அதற்காக விவசாயம் மற்றும் தொழில் சார்ந்த தொழில் வாய்ப்புகளை உருவாக்கி தருவோம். எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். தமிழகத்தை முன்மாதிரி மாநிலமாக உருவாக்கி தருவோம். குடும்ப பொருளாதாரத்தை உயர்த்துவோம். நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,000, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரமும் வழங்கப்படும். கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். விண்ணப்பித்த 60 நாட்களில் விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு வழங்கப்படும். மாவட்டத்திற்கு ஒரு தொழிற்பேட்டை உருவாக்கப்படும். நெய்வேலியில் குளிர்பதன சேமிப்புக் கிடங்கு, வடக்குத்து ஊராட்சி பேரூராட்சியாக தரம் உயர்த்தி, ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும். என்.எல்.சி. தனியார் மயமாவதை தடுத்து நிறுத்துவோம். வருகிற சட்டமன்ற தேர்தலில் நாங்கள் ஆட்சியை பிடிக்க அ.ம.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்ளை வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து மாவட்டத்தில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர்கள் நெய்வேலி பக்தரட்சகன், குறிஞ்சிப்பாடி வசந்தகுமார், புவனகிரி பாலமுருகன், சிதம்பரம் நந்தினி தேவி, காட்டுமன்னார்கோவில் நாராயணமூர்த்தி, திட்டக்குடி வசந்தவேல், கூட்டணி கட்சியான தே.மு.தி.க வேட்பாளர்கள் பண்ருட்டி சிவக்கொழுந்து, கடலூர் ஞானபண்டிதன் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து குக்கர் மற்றும் முரசு சின்னத்திற்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.