செய்திகள்
கறம்பக்குடி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
கறம்பக்குடி அருகே, குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கறம்பக்குடி:
கறம்பக்குடி அருகே பல்லவராயன் பத்தை ஊராட்சியை சேர்ந்தது, குளப்பன்பட்டி கிராமம். இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி மட்டுமே உள்ளது. அதுவும் இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ளது. அங்கு சென்றுதான் தண்ணீர் எடுத்து வர வேண்டியுள்ளது.
ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றாலும் அங்கு போதுமான அளவு தண்ணீர் கிடைப்பது இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்டஅதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை குளப்பன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அப்பகுதி பெண்கள், குளப்பன்பட்டியில் 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி அமைத்து குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு, அதிகாரிகள் தேர்தல் பணியில் இருப்பதால் அவர்களிடம் கலந்து பேசி உங்கள் பிரச்சினை தீர்க்கப்படும் என போலீஸ் இன்ஸ்பெக்டர் உறுதி அளித்தார். இதையடுத்து சாலைமறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.